நான் முதன் முதலில் அமரிக்கா வந்த போது என் அம்மா ஏர்போர்ட்டில் என் தலை மறையும் வரை சொல்லிக்கொண்டே இருந்தது "போய் சேர்ந்தவுடனே ரங்கராஜன் மாமாவையும், கலா மாமியையும் காண்டாக்ட் பண்ண மறந்துடாதடீ". என்னவோ என்னுடைய அமரிக்க வாழ்கையே என்னுடைய தூரத்து உறவினர்களான ரங்கராஜன் தம்பதியினரிடம் அடங்கி இருப்பதை மாதிரி ஒரு பில்டப் தந்தார். அதே மாதிரி லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் வாசலில் ரங்கராஜன் தம்பதி தயாராக காத்திருந்தனர்.
வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு மாமி தான் முதலில் கேட்டார் "உன்னை எங்கேமா கொண்டு போய் விடனும்?"
"என்னுடைய காலேஜுக்கு மாமி, டார்ம் ரூமில் தான் ஸ்டே பண்ணப்போறேன்"
இடையில் மாமா குறுக்கிட்டு, "முதலில் வீட்டுக்கு வாம்மா, டார்ம் விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்". மாமி ரகசியமாக மாமாவை முறைத்ததை நான் கவனிக்க தவறவில்லை. புது ஊரை, முகங்களை பார்க்கும் பயம் மற்றும் பயணக்களைப்பு(நான் வந்து சேர்ந்த நேரம் இந்தியாவில் பகல் 3 மணி) இருந்ததால் அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை. வீடு வரும் வரை காரில் அசாதாரணமான அமைதி நிலவியது.
வீடு வந்தவுடன் அப்பா- அம்மாவுக்கு நலமுடன் ஊர் வந்து சேர்ந்த விஷயத்தை கால் பண்ணி சொல்லிவிட்டு, பிறகு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அவர்கள் குழந்தைகளூடன் பேசிக்கொண்டிருந்தேன். மாமி ஏதோ நினைவுக்கு வந்தவளாக, "என்னோட வா கயல், மேல் தளத்தில் இருக்கும் கெஸ்ட் ரூம் காட்டறேன். அங்கே போய் ரெஸ்ட் எடுத்துக்கோ". நான் மேல் தளத்தில் இருந்த கெஸ்ட் ரூமில் தூங்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தேன். நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டது, தூக்கமில்லாமல் இருந்தது எல்லாம் சேர்ந்து தூங்கவிடாமல் ஏதோ பண்ணியது. சிறிது நேரத்துக்கு பிறகு படுத்திருப்பது சலிப்பாக இருக்கவே கீழே இறங்கி வந்து லிவ்விங் ரூமில் இருந்த புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.
பக்கத்து அறை மாஸ்டர் பெட்ரூமில், மாமியும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக கத்தலாக மாறியது. நான் கேட்க முயற்சி பண்ணவில்லை என்றாலும் கேட்பதை தடுக்கமுடியவில்லை.
"இப்போ என்ன அந்த பொண்ணு மேலே தனி கரிசனம் உங்களுக்கு?"
" என்ன கலா இப்படி பேசறே, அது நம்ம சொந்தக்கார பொண்ணு இல்லையா?"
"உங்களை விட எனக்கு தான் சொந்தம், அதான் கேட்கறேனே, எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்?"
"வாயை மூடுடி, இப்படி அசிங்கமா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். அந்த பொண்ணு எனக்கு சொந்த மகள் மாதிரி"
"இந்த டயலாக்கை நாங்க ஏற்கெனெவே கேட்டிருக்கிறோம்"- இந்த முறை மாமியின் குரலில் கிண்டல் தெரித்தது.
"எதுக்கு போய் எதை இழுக்கற? நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? அதை எல்லாம் நான் சொல்லிக்காட்டறேனா? வர வர உனக்கு வாய்கொழுப்பு ரொம்ப அதிகமாயிட்டே போகுது! என் பொறுமையை சோதிக்காதே"
"ஏன் என்ன பண்ணுவீங்க? அடிக்கப்போறீங்களா? இங்கே நீங்க அடிச்சால் நான் ஒன்னும் அழுதுட்டு பேசாமல் இருக்க மாட்டேன். உடனே 911 போலீஸை கூப்பிடுவேன். போலீஸ் வந்தால் என்ன நடக்கும் தெரியுமில்ல? டொமஸ்டிக் அப்யூஸ்"
மாமா குரல் தணிந்தவராக "உன்னோடு வாழறதை விட பேசாமல் விஷம் குடிச்சு சாகலாம். ராட்சசி!"
"அதை செய்ங்க முதல்ல. பெருசா பேச வந்துட்டார். அந்த பொண்ணு நம்மை பார்க்க வந்த கோலத்தை பாருங்க! ஜீன்ஸும், இறுக்க பிடிச்ச டிஷர்ட்டும். நல்ல பொண்ணு இப்படியா ட்ரெஸ் பண்ணும்?"
"அநியாயமா பேசாதே, இப்போலாம் மெட்ராஸில் பொண்ணுங்க இதை தானே போடறாங்க? ஏன் நீ போடல? கொஞ்ச நாள் வாயை கட்டுமா தாயே, கொஞ்சம் பழகின உடனே டார்முக்கு கொண்டு போய் விடலாம்"
மாமி எதையோ சொல்ல எத்தனிக்க,அதற்கு மேல் அங்கு நிற்க மனம் ஒப்பவில்லை. "ஜீன்ஸ், கோலம்" போன்ற வார்த்தைகள் என் மனதை ரொம்ப பாதித்ததால்(நான் ரொம்ப சென்சிடிவ் டைப்) பேசாமல் கெஸ்ட் ரூம் சென்று படுத்துக்கொண்டேன். இரவு 8 மணிக்கு மாமி தான் வந்து எழுப்பினாள்.
"கயல் எழுந்துக்கோமா, ஏதாவது வந்து சாப்பிடேன்"
பாத்ரூம் சென்று ஃப்ரெஷென் பண்ணிக்கொண்டு கீழ் தளத்தில் உள்ள டைன்னிங் டேபிளை அடைந்தேன். வீட்டில் கடும் அமைதி நிலவியது. குழந்தைகள் டிவியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, மாமா சாப்பிட்டுக்கொண்டே ஏதோ புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தார்.
"இப்போ எப்படி இருக்கு கயல் பரவாயில்லையா?" என்றார் முகத்தை ஏறிட்டுப்பார்க்காமலே. ஒருவேளை என் முகத்தை ஏறிட்டுப்பார்க்கவில்லை என்றால் பிரச்சினை வராது என்று நினைத்தார் போலும்.
"நல்லா இருக்கேன் மாமா, நீங்க ஏன் பேயடிச்சா மாதிரி இருக்கீங்க"
மாமி அவசரமாக, "அவருக்கு உடம்புக்கு சுகமில்லை கயல். அப்புறம் ஒரு விஷயம், உனக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் இந்த ஊரை நல்லா பழகற வரைக்கும் இங்கே தங்கிக்கலாம். இன்னொரு விஷயம், நாங்க ரொம்ப கன்சர்வேட்டிவ், பசங்க இண்டியன் கல்சர் மறக்ககூடாது இல்லையா? அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்க சரியா?"
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வந்த சில மணி நேரத்தில் இவங்க குடும்ப கலாச்சாரத்தை குலைக்கிற மாதிரி என்ன செய்துவிட்டேன்?
"இல்லை மாமி, நாளைக்கே நான் டார்முக்கு போகனும், முடிஞ்சால் என்னை கொண்டு போய் விடறீங்களா" - அப்போதிருந்த நிலையில், பயத்தில் இந்த வார்த்தைகளை எப்படி சொன்னேன் என்பது இன்று வரை எனக்கே புரியாத புதிர்.
மாமி முகம் உடனே மலர்ந்தது, பல்ப் போட்ட மாதிரி ஒரு பிரகாசம். "ஏன் கயல் 4-5 நாளாவது இரேன், டிஸ்னிவோர்ல்ட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ் எல்லாம் போகலாம். இப்போ என்ன அவசரம்?"
"இருக்கட்டும் மாமி, நிதானமா பார்க்கலாம். எனக்கு இன்னும் 1.5 வாரத்தில் கிளாசஸ் தொடங்குது. இன்னும் எந்தெந்த க்ளாஸ் எடுப்பதென்று ப்ளான் பண்ணனும், புக்ஸ் வாங்கனும் நிறைய வேலை இருக்கு எனக்கு!"
"உங்கம்மா சொன்னாமாதிரி ரொம்ப பிடிவாதக்காரிடி நீ" - என்றார் கலா மாமி, சிரித்துக்கொண்டே.
பி.கு: 360 டிகிரிக்கான காரணத்தை கடைசியில் விளக்குகிறேன்.
- தொடரும்