Wednesday, November 26, 2014

உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?!

 நண்பன் முத்துவுடன் வரும்போது எதிரே நடந்துவந்த வள்ளியையும் வசந்தாவையும் பார்த்த முனியசாமி..

"இங்கே பாரு வேடிக்கையை! நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியாகி இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க!"

"நீ சும்மா இருக்க மாட்டியா முனி!?" என்றாள் வசந்தா சிரிப்புடன்.

"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. சினிமா கொட்டகைல ஒரு சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க! அப்புறம் ஒரு பயலும் படம் பார்க்க மாட்டான்"

"சும்மா இருடா முனி! நல்லா வாயில வந்துடப்போது!" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே!

"அத்தை! என்னைப்போட்டு கிழிச்சுடாதே! நான் இனிமேல் வாயைத் திறக்கல!" என்று உண்மையிலேயே பயந்தான் முனி.

******************************

அவர்கள் கடந்து போனப்புறம்..

"அவுங்க உன் அத்தையாடா, முனி?" என்றான் முத்து மெதுவாக.

"இல்லடா தூரத்துச் சொந்தம். சும்மா அத்தைனு கூப்பிடுவேன்."

"எப்படிடா இவங்க ரெண்டு பேரும் திடீர்னு இப்படி ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க?"

"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டையைப் பார்த்தியா, முத்து?"

"டேய்! சத்தியமாச் சொல்லுறேன், அது மாதிரி ஒரு சண்டை  வாழ்நாள்ல பார்த்தது இல்லைடா!"

"ஆமடா ஊரே பார்க்கிறாப்பிலே அசிங்க அசிங்கமா கெட்ட வார்த்தையாச் சொல்லி திட்டி சண்டை போடுவாங்க! கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க!"

"அம்மாடி! எப்படிடா அதுக்கப்புறம் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்க!!"

"இதென்ன முதல் தடவையா? ஓ நீ ஆறுமாதம் முன்னாலதான் இந்தத் தெருக்கு வந்த?. மறந்தே போச்சு எனக்கு! அதான் உனக்கு இதெல்லாம் அதிசயமா இருக்கு?"

"உலகத்தில் இருக்கிற  எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்!"

"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தான்! பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவளுககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு."

"அதுக்காக இப்படியா?"

"கெட்டவார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுறதல அவங்களுக்கு ஒரு இன்பம்! அதைவிட  இந்தச் சண்டைய வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா? உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது!"

"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்ல? சீனி சொன்னான்! அது உண்மையா?"

"ஆமாடா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி வந்து ஆடும்!"

"நெஜம்மாவா?"

"ஆமடா! மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யணும் சொல்லும்! அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது இப்படி சாமி வரும்."

"சாமி வருதா? இதெல்லாம் உண்மையாடா? "

"என்னைக்கேட்டால்? நானா சாமி வந்து ஆடினேன்?

"என்னடா இது! ஒரு நாள் திருப்பிச் சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் அதே ஆள் தெய்வமாயிடுறாங்க!"

"முத்து! நான் வேணா வள்ளி அத்தைட்ட உன்னைக் கூட்டிப்போறேன். நீ சாமி வர்ரது பத்தி கேக்கிறயா அதுட்ட?!"னு சிரிச்சுக்கிட்டே கேட்டான் முனி.

"என்ன ஆளவிடுப்பா!"

16 comments:

RajalakshmiParamasivam said...

எல்லாமே attention seeking technique தான் என்று நினைக்கிறேன்.
பயங்கர சண்டைக்குப் பின், சேர்ந்து சினிமாவா.....வசந்தாவும் வள்ளியும் ஆச்சரய்ப் படுத்துகிறார்கள்.

G.M Balasubramaniam said...

எட்ட இருந்து பார்த்து, கேட்டு, ரசிக்கத்தான் முடியும். இதிலெல்லாம் யார் தலை கொடுப்பார்கள்.ஆள விடுப்பா.

Kasthuri Rengan said...

ஹ ஹா ஹா ...
நிகழ் கால நடப்புகளை இப்படி கற்பனையில் கலந்து சொல்வது அருமை.
இந்தப் பதிவை நான் ஒரு படிமமாகவே பார்கிறேன்..

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...
நடப்பை கதையாக்கி இருக்கிறீர்கள்...
அருமை... பக்கத்துல போன ஒண்ணு அசிங்க அசிங்கமாத் திட்டுவாங்க... இல்லேன்னா சாமி வந்து அடிப்பாங்க... எதுக்கு வம்பு... எட்ட இருந்தே ரசிப்போம்...

வருண் said...

*** rajalakshmi paramasivam said...

எல்லாமே attention seeking technique தான் என்று நினைக்கிறேன்.***

நானும் அப்படித்தான் நினைக்கிறேனங்க, ராஜி மேடம்!


***பயங்கர சண்டைக்குப் பின், சேர்ந்து சினிமாவா.....வசந்தாவும் வள்ளியும் ஆச்சரய்ப் படுத்துகிறார்கள்.***

அதெல்லாம் "forgive and forget" பாலிஸிதான். அடுத்த சண்டை வர்ர வரைக்கும்! :)))

வருண் said...

***G.M Balasubramaniam said...

எட்ட இருந்து பார்த்து, கேட்டு, ரசிக்கத்தான் முடியும். இதிலெல்லாம் யார் தலை கொடுப்பார்கள்.ஆள விடுப்பா.***

அடடா என்னமா சண்டை போடுவாங்க! :)))

நம்ம மறத்தமிழர் கலாச்சாரம்னு பேசும்போதெல்லாம் எனக்கு எங்க தெருவில் நடந்த சண்டைகள், நான் வேடிக்கை பார்த்தவைதான் ஞாபகம் வரும்! :)))

வருண் said...

***Mathu S said...

ஹ ஹா ஹா ...
நிகழ் கால நடப்புகளை இப்படி கற்பனையில் கலந்து சொல்வது அருமை.
இந்தப் பதிவை நான் ஒரு படிமமாகவே பார்கிறேன்..***

வாங்க மது!

ஏதோ அகிலன் கதையில் படிச்சதுனு நெனைக்கிறேன்..

மெய்யை பொய் போல சொல்வதும் கதைதான்.. பொய்யை மெய் போல சொல்லுவதும் கதைதான். :)))

வருண் said...

***-'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...
நடப்பை கதையாக்கி இருக்கிறீர்கள்...
அருமை... பக்கத்துல போன ஒண்ணு அசிங்க அசிங்கமாத் திட்டுவாங்க... இல்லேன்னா சாமி வந்து அடிப்பாங்க... எதுக்கு வம்பு... எட்ட இருந்தே ரசிப்போம்...***

வாங்க குமார்!

நீங்களும் நம்ம முனியசாமி, முத்து குடியிருந்த தெருவில்தான் குடியிருதீங்களோ என்னவோ குமார். அனுபவிச்சு சொல்றமாதிரி இருக்கு!:)

நம்ம வள்ளீயக்காவைத் தெரியுமா உங்களுக்கு? :))))

மகிழ்நிறை said...

so! உங்க ஊரிலும் இந்த முளைப்பாரி விழாகள் எல்லாம் உண்டு !!! எங்கள் ஊரின் அந்த விழாகாலம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரீசன் ஒன் எந்த ஊருக்கு திருமணம் முடித்து போன அத்தைகளும், அக்காக்களும் இப்போ என் தோழிகளும் அந்த பதினைந்து நாள் திருவிழாவில் மூன்று நாள் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள். ரீசன் டூ-எங்கள் தெருவே பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களும் அத விட நெருக்கமான நட்பு குடும்பங்களும் கொண்டது. so ஒரு வாரமாவது தங்கி எல்லோர் வீட்டிலும் விருந்து சாப்பிட்டு, செம கலகலப்பான இருக்கும். அதுவும் மே மாதம் தான் அந்த திருவிழா!!
---------
இதுபோலும் அடாவடி நட்புகார வசந்தி (!!)அத்தை,மல்லிகா சித்தியும் நினைவுக்கு வந்து போகிறார்கள்:))
-----
நீங்க வைக்கிற கேரக்டர் பெயர்களின் ஒரு ரைம் இருக்கே கவனிசீங்களா வருண்

வருண் said...

வாங்க மைதிலி! இன்னும் இந்தத் திருவிழா எங்க ஊரில், எங்க தெருவில் (முளைக்கொட்டு) நடந்துகொண்டுதான் இருக்கு மைதிலி. ஆனால், அமெரிக்கா வந்த பிறகு கொண்டாடுவது, தாங்க்ஸ்கிவிங், க்ரிஸ்த்மஸ் போன்றவைதான்.

இப்போ எங்களுக்கு விடுமுறை, நாளை தாங்க்ஸ்கிவிங் (வியாழன்) என்பதால் நாளை மறுநாளும் லீவு. அப்புறம் வீக் எண்ட். ஆக 4 நாட்கள் விடுமுறை.

வியாழன் அன்று அமெரிக்கன் ஃபுட்பால் , வெள்ளி அன்று ஷாப்பிங், ஷாப்பிங் னு போகும். கிருஷ்த்மஸ்க்கு நண்பர்களுக்கு கிஃப்ட் கொடுக்க இப்போவே ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சுடுவோம். :)))

-----------------

***இதுபோலும் அடாவடி நட்புகார வசந்தி (!!)அத்தை,மல்லிகா சித்தியும் நினைவுக்கு வந்து போகிறார்கள்:))***

நம்ம ஊரிலெல்லாம் ஒரு சின்ன சண்டை போட்டுத்தான் அன்பு, உரிமை எல்லாம் காட்டுவாங்க. :)))
__________________


"நீங்க வைக்கிற கேரக்டர் பெயர்களின் ஒரு ரைம் இருக்கே கவனிசீங்களா வருண்"

ஆமா, ஒரே "வ" வா இருக்கு!!!! (வருணையும் சேர்த்து) உங்களை மாதிரி புத்திசாலி வாசகர்கள்தான் இதையெல்லாம் கவனிக்க முடியும். :)

வருண் said...

முனியும், முத்துவும் கூட ரைம் ஆகுதோ!!

நான் சத்தியமா இதை கவனிக்கவில்லை, மைதிலி!

சதீஷ் செல்லதுரை said...

என்னன்னு புரில..இது கதையா இருந்தாலும் அவங்க சண்ட போட்டுகிட்டதுக்கும் சேர்ந்து கொண்டதுக்கும் அவங்க சாமியாடுவதற்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு புரில...
ஒரு வேளை நான் வளரனுமோ?

முடிந்தால் விளக்கவும்...

மகிழ்நிறை said...

நாலு நாள் லீவ்!!! நல்லா என்ஜாய் பண்ணுங்க:) ஹாப்பி ஹாலிடேஸ்:)

வருண் said...

****சதீஷ் செல்லதுரை said...

என்னன்னு புரில..இது கதையா இருந்தாலும் அவங்க சண்ட போட்டுகிட்டதுக்கும் சேர்ந்து கொண்டதுக்கும் அவங்க சாமியாடுவதற்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு புரில...
ஒரு வேளை நான் வளரனுமோ?

முடிந்தால் விளக்கவும்...****

வாங்க சதீஷ் செல்லதுரை.

உங்களை சிவகாசிக்காரன் பதிவில் ஒரு விவாதத்தில் "பார்த்த" பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்.

உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. :)

---------------------


"வள்ளி அத்தை" களை நம் தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் (நீங்களும்தான்) பார்த்து இருக்கலாம்.

அவரைப் பார்க்கும்போது எனக்கு தோனுவது..

ஒரு சாதாரண மனிதர் சாமியாவது இந்துக் கலாச்சாரத்தில்தான் என்பது.

இந்த "எதார்த்தத்தை" இக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

இதை நீங்க "பெருமை"யாகவும் சொல்லலாம், "சிறுமை"ப்படுத்தவும் செய்யலாம். அது முற்றிலும் உங்களைப் பொருத்தது. :)

saamaaniyan said...

சிறிது இடைவெளிக்கு பிறகு வருகிறேன் வருண்...

தெருச்சண்டையையும், சாமி வருவதையும் குறிப்பிட்டு, ஒப்பிடுதலை வாசகருக்கே விட்டுவிட்ட அருமையான பாணி !

இந்த " attention seeking technique " பிரச்சனையும் சீசன் வியாபாரிகளை போலதான் ! குழாயடி என்றால் கெட்ட வார்த்தைகள் கொட்டும்... கோயில் பிரகாரம் என்றால் சாமி ஏறிவிடும். கவண ஈர்ப்பு ஒன்றே பிரதானம்.

கவண ஈர்ப்பை தாண்டிய மனநல காரணம் ஒன்றும் இதில் உண்டு... பெண்ணின் பேச்சு எடுபடாத சமூகத்தில் சாமியின் பெயரால் தங்கள் எண்ண ஓட்டத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் முயற்சி.

நன்றி
சாமானியன்

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹ் சூப்பர் அப்படியே ஒரு கிராமத்து நிகழ்வு...இந்தச் சண்டை எல்லாம் பார்த்துருக்கோம்...

ஆனா, பக்கத்துல போனது இல்லப்பா....போனா நம்மளையும் அதுல இழுத்துருவாங்க.....அழகா சொல்லிருக்கீங்க வருண்....(இப்படிச் சொல்லலாம்ல)