Sunday, August 3, 2014

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

ரூபாவா? அவளா இவள்! அவளேதான்! இல்லையே அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து ஐந்து வருடமாகிறது! நண்பன் பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை...

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் ராமகிருஷ்ணனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும் ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்! அவன் உலகில்! மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது! நிதர்சனம் அதுதான்! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி, நம் மனதை நாமே மனச்சலவை செய்து வாழும் போலி வாழ்க்கை!

  அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவள்தான் எத்தனை அழகு! அவளைவிட அழகு அந்தக்குழந்தை. ரூபா சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஹாய் சொல்லலாமா என ஒரு நொடி வந்த நினைப்பை தூக்கி எறிந்தான். அஷோக்கைப் பொறுத்தவரையில் இன்று அவள்  ஒரு நாட்கடந்து போன பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! ஆனால் இன்று?  உயிருடன் வாழும் ஒரு அழகான பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இந்த உண்மையைத்  திரும்பத் திரும்பச் சொல்லணுமா என்ன?

*************************

படிச்சாச்சா? அப்போ இதையும் படிங்க!!!

 மறந்து வாழ வேண்டும்!

---------------------------

இது ஒரு மீள்பதிவே!

 இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal said...

பாஸ் தலைப்பு மிக அருமை & உங்கள் பதிவில் சொன்னதும் உண்மை.. நான் எனது இன்றைய பதிவில் ரெட்கலரில் சொல்லியது மட்டும்தான் உண்மையாக உணர்ந்து சொன்னது அதைத்தான் நட்புக்கு இலக்கணம் என்பேன். மற்றவையெல்லாம் பதிவிற்காக அலங்கரிக்கப்பட்ட வார்த்தை அலங்காரம் மட்டுமே..

நான் ரெட்கலரில் சொல்லியது மாதிரி நடக்க முயற்சிக்கிறேன். ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்கள்தான் நம்மை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்..

மீண்டும் சொல்கிறேன் உங்கள் தலைப்பு மிக அருமை & உண்மையும் கூட

வருண் said...

@ ரூபன்: நன்றி ரூபன்.


@ தல ம த: ***நான் ரெட்கலரில் சொல்லியது மாதிரி நடக்க முயற்சிக்கிறேன். ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்கள்தான் நம்மை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்..

மீண்டும் சொல்கிறேன் உங்கள் தலைப்பு மிக அருமை & உண்மையும் கூட***

நீங்க ரெட்ட் கலரில் என்ன சொல்லியிருக்கீங்கனு இன்னொரு முறை வாசிக்கிறேன். :-)

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்