Monday, February 23, 2009

முத்துக்குமார், சீமான், கருணாநிதி!!!

தமிழர்கள் பல வகை. தலைப்பில் சொல்லப்பட்ட மூவரும் மூன்று வகையான தமிழர்கள். அவர்களின் செயல்கள் அவர்கள், நிலைமை, தகுதி, வயது, உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு ஏற்றார்போல் இருக்குனு தோனுது

இதில் மறைந்த தோழர் முத்துக்குமார் ஒரு வகை. என்னிடம் உங்களுக்கு கொடுக்க ஒண்ணுதான் இருக்கு. அது என் உயிர் என்று தன் உயிரையே ஈழத்தமிழருக்காக கொடுத்துவிட்டு போய்விட்டார் இந்த தமிழர். அதற்கு நம் பதிவர்கள் எல்லாம் மறைந்த உடன்பிறவா சகோதரர் முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டார்கள். அவருடைய வீரச்செயலை பாராட்டினார்கள். நிச்சயம் அவருடைய தியாகம் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியது.

அடுத்த வகை! இயக்குனர் சீமான்! இவர், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து இப்போது சிறையில் இருக்கிறார். அவரையே நாம் தலைவராக்கினால் என்ன? என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். அவர் தலைவராகி, தமிழ் நாட்டு முதல்வர் ஆனா இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவாரா? எப்படி? விளக்கம் சொல்லவும்!

மூன்றாவது வகை, முதல்வர் கருணாநிதி. சமீபகாலமாக, திரு கருணாநிதி மேல் பயங்கர தாக்குதல் நடக்கிறது. அவருடைய அரசியல்தான் தமிழர்களை கொல்லுவதுபோல், அவர் தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று பலர் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

எனக்கு உண்மையிலேயே புரியலை. அவர் தமிழின துரோகியா? இப்போ கருணாநிதி என்னதான் செய்ய முடியும்? என்னதான் அவர் செய்யனும் இந்த ஜீனோசைட தடுக்க ? அவருக்கு அவ்வளவு சக்தி இருக்கா?

இந்தியா என்கிற நாட்டின் கொள்கைகளை எதிர்த்து போய், ஈழத்தமிழர்களுக்கு எப்படி அவர் உதவ முடியும்? அவருக்கு உண்மையிலேயே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் மேல் கருணை, அன்பு இல்லாமல் எப்படிப் போகும்?

நான் ஒண்ணும் முதல்வரின் ஜால்ரா கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை அவர் ஆசைப்பட்டாலும் அதை அவரால் மட்டும் தீர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

என்ன, அவர் ஒரு தியாகம் பண்ணலாம், ஈழத்தமிழருக்காக அவர் ஆட்சியை இழந்து, ஜெயலலிதாவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியும். அதைத்தான் எல்லோரும் எதிர் பார்க்கிறார்களா? அப்படி அவர் செய்தால் அவர் தமிழினத்தைக் காப்பாற்ற உதவியதாக ஆகுமா?

அப்படி ஆட்சி இழந்து, ஜெயலலிதா வந்தால், அவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை!

என்னைக்கேட்டால் மேலே சொல்லப்பட்ட மூன்று தமிழர்களுமே, ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள். ஒவ்வொருவருடைய நிலைமையும் வேறு வேறு! ஒருவர் தன் உயிரை இழந்து தியாகியானர். ஒருவர் சிறை சென்று இருக்கிறார். இன்னொருவர் தன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாத நிலையில் இந்தியா என்கிற நாட்டு துரோகியாகாமல் இருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் இயலாமையைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தாறுமாறாக, அவர்தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லைனு எனக்கு தோனுதுங்க!

14 comments:

ஆ.ஞானசேகரன் said...

//முதல்வர் கருணாநிதியின் இயலாமையைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தாறுமாறாக, அவர்தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லைனு எனக்கு தோனுதுங்க!//
நல்லாதான் இருக்கு?.... சேர்த்து(மக்களிடம் எடுத்த) வைத்த சொத்துல கொஞசம் ஈழதமிழருக்கு அனுப்ப சொல்லுங்களேன்..

வருண் said...

***ஆ.ஞானசேகரன் said...
//முதல்வர் கருணாநிதியின் இயலாமையைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தாறுமாறாக, அவர்தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லைனு எனக்கு தோனுதுங்க!//
நல்லாதான் இருக்கு?.... சேர்த்து(மக்களிடம் எடுத்த) வைத்த சொத்துல கொஞசம் ஈழதமிழருக்கு அனுப்ப சொல்லுங்களேன்..

23 February, 2009 5:08 PM***

இது பணம் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்சினை இல்லை, திரு. ஞானசேகரன்!

Unknown said...

தமிழினத் துரோகம் செய்யும் கருணாநிதி நம்பிக் கொண்டிருக்கும் ஒரே ஆயுதம் மக்களின் மறதி என்கிற கொடிய ஆயுதம் ஆகும்.
இந்த கொடிய ஆயுதத்தைப் பயன் படுத்தி மீண்டும் தேர்தலில் வென்றுவிட முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு உண்டு.

இதற்கு ஒரே எடுத்துக் காட்டு உங்கள் பதிவு.

இப்போது இலங்கைக்கு நிதி திரட்டி அனுப்பிய கருணாநிதி ஒரு வருடத்திற்கு முன்பு பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு வழங்குவதற்காக பழ.நெடுமாறன், வைகோ ஆகியோரால் சேகரித்து வைக்கப் பட்ட உணவு மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை அனுப்பத் தடை விதித்தவன் என்பதை மறந்து விடலாம்.

மருந்துப் பொருட்களின் காலம் முடிவடையுமுன் அனுமதி வேண்டி உண்ணாவிரதமிருந்த பழ.நெடுமாறனிடம் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதை மறந்து விடலாம்.

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து வைகோ, திருமா போன்றோர் சோனியாவின் இந்த கொலைகார ஆட்சி துவங்கியது முதலே எதிர்த்தும் குரல் கொடுத்தும் வந்த போதும், ஆட்சியிலே பங்கு வகிக்கும் கருணாநிதி தன் மக்களுக்கு பதவியைப் பங்கு போடுவதிலேயே காலத்தைச் செலவழித்தது மட்டுமல்லாமல் இதற்கு மறைமுக ஆதரவு (அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்காமல்) வழங்கியதை மறந்து விடலாம்.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி வழங்கியதைக் கண்டிக்காததை மறந்து விடலாம்.

பத்து நாட்களுக்கு ஒருமுறை நாளிதழ்களில் புலிகளுக்கு ஆயுதம் கடத்தல், புலிகளுக்கு கோலிக் குண்டு கடத்தல், இலங்கைத் தமிழர் கைது, என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவரும் படி பார்த்துக் கொண்டது.

இப்போதும் தமிழகத்தில் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் பல தளங்களில் பலவாறு நடைபெற்று வரும் வேளையில், இதனைத் தன் குடும்ப ஊடகங்களில் இருட்டடிப்பு செய்து தமிழினத் துரோகம் செய்வதை மறந்து விடலாம்.

இலங்கைத் தமிழருக்காய் இங்கே அனைத்துக் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஒன்றுபட்டு போராட்டங்களை முன்னெடுக்கும் வேளையில் அதனைக் குலைக்கும் வகையில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது, வழக்கறிஞர்களை காவல்நாய்களை ஏவி தாக்கச் செய்து திசை திருப்புவது. அதே போன்ற பெயரில் இன்னொரு அமைப்பைத் தொடங்கி ஜல்லியடிப்பது. உணர்ச்சியற்ற, உணர்வில்லாத பல்லிளித்துக் கொண்டு புகைப்படங்களுக்கு முகம் காண்பிக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைக் கூட்டி வந்து போராட்டதில் ஈடுபடும் மற்றவர்களை சலிப்படையச் செய்வது.

இதையெல்லாம் காலப் போக்கில் மக்கள் மறந்து போவார்கள் என்கிற குருட்டு நம்பிக்கை கருணாநிதிக்கு இருப்பதால்தான் அவன் தமிழர்களை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறான்.

ஆனால் நேற்றைப் போல் இன்று இல்லை இன்றைப் போல் நாளை இல்லை என்பது எண்பது வயதாகியும் அவனுக்கு தெரியவில்லை. மாற்றமுடியாதது எதுவும் இல்லாமல் போயிருந்தால் காங்கிரசிடம் இருந்து தி.மு.க. ஆட்சியப் பிடித்திருக்காது. இதே கருணாநிதியும் நிச்சயம் மண்ணைக் கவ்வுவான். இது உறுதி.

கருணாநிதியின் தமிழினத் துரோகங்களை மறக்க மாட்டான் உண்மையான தமிழன்.

Unknown said...

ஆக, பலர் ஈழத்துதமிழர்கள் தான் தமிழர்கள், மற்றவரெல்லாம் தமிழர்கள் அல்ல, அல்லது மற்ற தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் அல்ல , சுபிட்சமாக உள்ளனர், ஈழத்தமிழ்ர் பிரச்சனையை முடித்துவைப்பவரே தமிழர்களின் தலைவர் என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது

வாக்காளன் said...

ஈழத்தை ஆதரித்தே ஆகவேண்டும், நம் இனமான ஈழத்தமிழன் காப்பாற்றிட குரல் கொடுத்திட வேண்டும் என்றாலும் தமிழக தேர்தல் களம் /தமிழக அரசு என்று வரும் போது, ஈழத்தை வைத்து மட்டுமே குரல் கொடுத்திடல் என்பது சாத்தியமா என்பதை பார்த்திட வேண்டும். தமிழக ஆட்சி / அரசமைப்பு என்று வரும் போது ஈழத்தையும் தாண்டி பல விஷயங்களை யோசித்திட வேண்டியிருப்பது தானே எதார்த்தம்?

ஈழத்திற்கு நம் ஆதரவு, குரல் என்றாலும், உண்மையில் பார்த்தால் இந்தியாவிற்கென்று , தமிழகத்திற்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. தமிழக தமிழர்கள் நலன், தமிழகத்திற்கான முன்னேற்றங்கள், தமிழகத்திற்கான திட்டங்கள் என்பதும் தேர்தல் நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பது நிதர்சனம், அது தானே முறை?

குறிப்பாக , தமிழகத்தில் இப்போது இருக்கும் பெரிய கட்சிகள் தி மு க , அ திமு க,..

ஈழம் பற்றிய பிரச்சனை எரிந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் முடிவு என்ன காட்டுகிறது..

முதலில் இலங்கை பிரச்சனை குறித்து சமீபத்தில் வந்த சர்வே என்ன என்று பார்ப்போம்.

ஈழத்துக்காண ஆதரவும் , ஈழத்து பிரச்சனைக்கு நாம் குரல் கொடுத்திட வேண்டும் என்றும் சுமார் 70% பேரு கருத்து சொல்லியிருக்கும் நிலையை பார்த்தோம் ..

ஜெயலலிதாவின் நிலை தவறு என்று சுமார் 60% கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் கருணாநிதி இன்னும் வேகமாக இந்த பிரச்சனையில் செயல்பட வேண்டும் என்று 55 % பேர் கருத்து தெரிவித்தனர்..

இந்த நிலையில், அடுத்து தேர்தலை மைய்யமாக எடுக்கப்பட்ட சர்வேயில், தி மு க 30% ஆதரவும், அதிமுக விற்கு 28% ஆதரவும் என்று வந்துள்ளது.. இலங்கை பிரச்சனையில் அனுகுமுறை என்ற ஒற்றை கருத்துடன் மக்கள் இந்த கருத்துகணிப்பில் வாக்களித்திருந்தால், தி மு க , அதிமுகவிற்கு வழக்கமாக கிடைக்கும் 24 - 35 % வரையிலான அதரவு கிடைத்திருக்குமா என்பதையும் பார்க்கவேண்டும்.

ஈழத்துக்காண ஆதரவு மட்டுமே கணக்கில் எடுத்திருந்தால், தி மு க விற்கு 15% , அதிமுகவிற்கு 2% கூட தாண்டியிருக்காது

ஆக, தேர்தல் என்று வரும்போது, மாநிலத்துக்கு என்ன செய்வார்கள், இவர்களின் திட்டங்களால் மாநிலம் எப்படி வளர்ச்சி பெறும் போன்ற உள்நாட்டு அரசியலை முன்வைத்தே யோசிப்பார்கள். இலங்கை பிரச்சனை ஒரு பாதிப்பு தருமே தவிர்த்து அதுவே காரணியாக அமையாது..

இன்றளவும் கிராமங்களில் மக்களுக்கு இலைங்கை பிரச்சனையை காட்டிலும், தினக்கூலி, அன்றாட வாழ்கை என்பது தான் முதன்மை..

ஏன் நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள்.. ஒரு உதாரணம்

ஒரு கட்சி சொல்கிறது - இலங்கை பிரச்சனைக்கு எல்லாம் செய்வேன், என் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்படுவேன்.. இந்திய அரசை ஆக்ரோஷமாக எதிர்ப்பேன், இலங்கைக்கு கடும் எச்சரிக்கை தருவேன்.. ஆனால் வேலைவாய்ப்பின்மை , தமிழக வளர்ச்சி போன்ற விஷயங்களில் சற்று தொய்வு ஏற்படும் என்று சொல்கிறது..

மற்றொரு கட்சி சொல்கிறது - இலங்கை பிரச்சனைக்கு முடிந்தளவு எல்லைக்குட்பட்டு செய்வோம், தார்மீக ஆதரவு தருவோம்.. ஆனால் தமிழக வளர்ச்சிக்கு இந்த இந்த திட்டங்கள் தீட்டுவோம்.. வேலை வாய்ப்பு பெருக்குவோம், விலைவாசி குறைய எல்லாவித நடவடிக்கை எடுப்போம் .

இப்போது யாருக்கு வாக்களிப்போம்?? நம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

வெளிநாட்டில் இருந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வேண்டுமானால் , தமிழகத்தில் என்ன நடக்கவேண்டும் , எப்படி நிர்வாகம் வேண்டும் ( அட்லீஸ்ட் , தமிழகம் திரும்பி வரும்வரை) என்பது அவ்வளவு முக்கியத்துவம் இல்லாது போகலாம் , ஆனால் இங்கேயே வாழ்பவர்களுக்கு??

யோசிக்கவேண்டும் அல்லவா?

வருண் said...

***பின்னூட்டம் பெரியசாமி.. said...
தமிழினத் துரோகம் செய்யும் கருணாநிதி நம்பிக் கொண்டிருக்கும் ஒரே ஆயுதம் மக்களின் மறதி என்கிற கொடிய ஆயுதம் ஆகும்.
இந்த கொடிய ஆயுதத்தைப் பயன் படுத்தி மீண்டும் தேர்தலில் வென்றுவிட முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு உண்டு.

இதற்கு ஒரே எடுத்துக் காட்டு உங்கள் பதிவு.

----

ஆனால் நேற்றைப் போல் இன்று இல்லை இன்றைப் போல் நாளை இல்லை என்பது எண்பது வயதாகியும் அவனுக்கு தெரியவில்லை. மாற்றமுடியாதது எதுவும் இல்லாமல் போயிருந்தால் காங்கிரசிடம் இருந்து தி.மு.க. ஆட்சியப் பிடித்திருக்காது. இதே கருணாநிதியும் நிச்சயம் மண்ணைக் கவ்வுவான். இது உறுதி.****

கருணாநிதி மண்ணை கவ்வினால் ஈழத்தமிழர் கண்ணிர் துடைக்கப்படும் என்று எப்படி சொல்கிறீர்?

வரப்போகும் ஜெயலலிதா,கண்ணீரை துடைப்பாரா?

வருண் said...

***muthu said...
ஆக, பலர் ஈழத்துதமிழர்கள் தான் தமிழர்கள், மற்றவரெல்லாம் தமிழர்கள் அல்ல, அல்லது மற்ற தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் அல்ல , சுபிட்சமாக உள்ளனர், ஈழத்தமிழ்ர் பிரச்சனையை முடித்துவைப்பவரே தமிழர்களின் தலைவர் என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது

24 February, 2009 12:03 AM ***

நீங்கள் இப்படிச் சொன்னாலும் நீங்களும் ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிப்பவர்தான் என்பது உண்மைதான்.

நிச்சயம் கருணாநிதி தமிழினமழிவதை ரசிப்பவரல்ல என்று நம்புகிறேன்.

எல்லோரும் நினைக்கும் அளவுக்கு அவருக்கு இதைத்தடுக்க சக்தி கிடையாது என்பதுதான் உண்மை!

வருண் said...

***ஜெயலலிதாவின் நிலை தவறு என்று சுமார் 60% கருத்து தெரிவித்தனர். ***

40% தமிழர்கள் யார் இங்கே?

அதாவது ஜெயலலிதா நிலை தவறு இல்லை என்று சொல்லும் 40% மக்கள் யார்?

பார்ப்பனர்கள் 40% கிடையாது.

தமிழ் மக்களிலேயே 40% துரோகிகள் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால் அதற்கு என்ன சொல்லப்போறீங்க வாக்காளரே?

Unknown said...

//கருணாநிதி மண்ணை கவ்வினால் ஈழத்தமிழர் கண்ணிர் துடைக்கப்படும் என்று எப்படி சொல்கிறீர்?

வரப்போகும் ஜெயலலிதா,கண்ணீரை துடைப்பாரா?//

கருணாநிதி இருக்கும் போது ஈழத்தமிழர் கண்ணீரைத் துடைக்கவிட மாட்டான் என்பதே எனது கருத்து. இதனை தற்போது நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கிட அவன் ஆடும் அசிங்கமான நாடகங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஜெயலலிதா பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டிருக்கப் போகிறீர்கள். பூச்சாண்டியைக் காட்டி சோறு கொடுக்கலாம். நஞ்சுச் செடியை வளர்க்கலாமா?

ஒருவேளை ஜெயலலிதா பதவியில் இருந்திருந்தால் இந்த கருணாநிதி சுயநலத்திற்காகவாவது, விளம்பரத்திற்காகவாவது, ஒன்று பட்டு திரண்டு வரும் மக்கள் போராட்டத்தை ஜெயலலிதாவுக்கு எதிராக திருப்ப வேண்டும் என்ற எண்ணத்திலாவது ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பான். ஒரு பயனும் இல்லாத இவன் ஆட்சி இருந்தென்ன? போயென்ன?

இப்போது கூட கருணாநிதியின் நாடகம் தொடங்கியது ஜெயலலிதா ஈழப் பிரச்சினை குறித்து கண்டனக் குரல் எழுப்பிய பிறகுதான் என்பதை மறந்து விட்டீர்கள் போல. ஜெயலலிதா குரல் கொடுத்தது உண்மையான அக்கறையில் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

கருணாநிதி போனால் ஜெயலலிதாதான் வர வேண்டுமா? மாற்றத்திற்கான அழைப்பு அவளுக்கும் சேர்த்துத்தான். துடைத்தெறிய வேண்டியது அவளையும் சேர்த்துத்தான்.

வருண் said...

***ஒரு பயனும் இல்லாத இவன் ஆட்சி இருந்தென்ன? போயென்ன?***

கருணாநிதியை தூக்கி எறிவோம்!

ஜெயலலிதாவை தூக்கி எறிவோம்.

மூனாமவர் ஒருவரை கொண்டு வந்து எப்படி தமிழர் அழிவை தடுக்க முடியும்னு நீங்க நெனைக்கிறீங்கனு சொல்லுங்க!

சிவாஜி த பாஸ் said...

கருணாநிதி-யின் குடும்பம் செய்வது அரசியல் வியாபாரம், முதலீடு தமிழும், மடப்பய தமிழனும்தான்! (முக்கியமாக, ஈழ தமிழன்!)
வியாபாரம் படுக்கும்போது மட்டுமே இந்த இரண்டும் தேவை! இப்போது வியாபாரம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் கணஜோராக நடந்து கொண்டிருக்கிறது, இடையில் ஈழம் கூழம்-னுகிட்டு! த்தூ....!

வருண் said...

***சிவாஜி த பாஸ் said...
கருணாநிதி-யின் குடும்பம் செய்வது அரசியல் வியாபாரம், முதலீடு தமிழும், மடப்பய தமிழனும்தான்! (முக்கியமாக, ஈழ தமிழன்!)
வியாபாரம் படுக்கும்போது மட்டுமே இந்த இரண்டும் தேவை! இப்போது வியாபாரம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் கணஜோராக நடந்து கொண்டிருக்கிறது, இடையில் ஈழம் கூழம்-னுகிட்டு! த்தூ....!***

உங்க கருத்துக்கு நன்றி, பாஸ்! :)

Unknown said...

//மூனாமவர் ஒருவரை கொண்டு வந்து எப்படி தமிழர் அழிவை தடுக்க முடியும்னு நீங்க நெனைக்கிறீங்கனு சொல்லுங்க!//

என்னங்க இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்க.
ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை நடத்துவது ராஜபக்சேவே அல்ல சோனியாவின் காங்கிரஸ் அரசு. .

ஆயுதம், பயிற்சி, ஆள், பணம் கொடுத்து பிண்ணனியில் இருந்து நடத்தி வருவது இந்திய அரசு.

இந்திய அரசை முட்டுக் கொடுத்து நடத்தி வருவது தமிழகத்தின் கருணாநிதியின் 40 எம்.பிக்கள்.

அரசையே நடத்திவரும் இந்த 40 எம்பிக்களால் இந்திய அரசின் இலங்கைக்கான வெளியுறவுக்கொள்கையை தீர்மானிக்கமுடியாதா? ஆளுங்கட்சிக்கு(காங்கிரஸ்) எம்பிக்களே இல்லாத மலையாளிகள் தீர்மானித்ததே இந்திய வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறதே எப்படி.

அப்படி ஒருவேளை தவறாக இருந்தால் செல்வாக்கைப் பயன் படுத்தி அதனைச் செய்திருக்க வேண்டியது கருணாநிதி. கருணாநிதி கடமை தவறி விட்டான்.

ஆகவே தமிழர் நலனை காக்கிற ஒரு அமைப்பிற்கு ஆதரவளித்து டெல்லிக்கு அனுப்பவேண்டும்.

இந்த பின்னூட்டத்திற்கும் உங்கள் பதில் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
அதையும் நானே கேட்டு நானே பதில் சொல்லிக் கொள்கிறேன்.

வருண் said....
***தமிழர் நலனை காக்கிற ஒரு அமைப்பிற்கு***

யாருங்க அந்த தமிழர் நலன் காக்கிற அமைப்பு?
அதை நீங்க தான் தீர்மானிக்கனும். தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கு. இதில் தி.மு.க. , அ.தி.மு.க., தவிர மற்றவற்றில் ஏதாவது ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது உங்கள் தலைமையில் ஒரு கட்சி துவங்கலாம். நான் நிச்சயம் ஆதரிப்பேன். இப்போதைய கட்டாயத் தேவை மாற்றம்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்.

வருண் said...

***யாருங்க அந்த தமிழர் நலன் காக்கிற அமைப்பு?
அதை நீங்க தான் தீர்மானிக்கனும். தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கு. இதில் தி.மு.க. , அ.தி.மு.க., தவிர மற்றவற்றில் ஏதாவது ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது உங்கள் தலைமையில் ஒரு கட்சி துவங்கலாம். நான் நிச்சயம் ஆதரிப்பேன். இப்போதைய கட்டாயத் தேவை மாற்றம். ****

ரொம்ப நன்றிங்க! ஆனால்..

எனக்கு அதுபோல் "ப்யூப்பிள் ஸ்கில்" கெடையாதுங்க. தலைவரா? தொண்டரா இருக்கவே தகுதி இருக்கா என்னனு தெரியலை :-)