Monday, July 8, 2013

இளவரசன் மரணம்! யார் குற்றவாளி?!

"மரணம் என்னும் தூது வந்தது! அது மங்கை என்னும் வடிவில் வந்தது!" என்று காதல் தோல்வியின்போது பெண்களை வில்லனாக்கி இப்படி பலவாறு விமர்சிப்பதே நம் கலாச்சாரம், பண்பாடு!

காதலனை காதலி  கைவிடுவதற்கு என்ன காரணம்? கவனமாக அலசி, யோசித்துப் பார்த்தால் பல நேரங்களில் நமது சமுதாயம் மற்றும் அவளைப் பெற்றவர்கள்,   ஒரு இளம் பெண்ணை, அவள் விருப்பப்படி முடிவு எடுக்கவிடுவதில்லை! காதலியின்  முடிவை முடிவு செய்வதே அவள் பெற்றோர்கள், சாதி சனம், சொந்த பந்தம்னு சொல்லிக்கிட்டு அலைபவர்கள்தான். இவர்களுக்கெல்லாம் அவள் ஒரு அடிமை என்பதுதான் நிதர்சனம். இதில் அந்த மங்கை என்ன செய்வாள் பாவம்?

சட்டப்படி "அவள் வயதில் முதிர்ந்தவள், தன் வாழ்க்கையை முடிவு செய்ய தகுதியானவள்" என்றாலும் அவள்  ஒரு சின்னப்பொண்ணுதான். உலக அனுபவம் இல்லாதவள்தான்.

உலக அனுபவம்? வயதில் முதிர்ந்த, படித்த,  வலைபதிவர்களே,  தன் சாதிக்காரன் எல்லாம் யோக்கியன், தன் சாதித் தலைவர்களெல்லாம் புத்தனும், காந்தியும் என்று  பிதற்றிக்கொண்டு வெட்கமே இல்லாமல் சாதித்தளம் ஒன்றை நடத்திக்கொண்டு திரிகிறார்கள்!

அனுபவம் மிக்க இவர்களே தான் ஒரு சாதி வெறி பிடித்து அலையும் அடிமுட்டாள் என்று தன் ஒவ்வொரு பதிவிலும் காட்டும்போது, ஒரு இளம்பெண்ணின் உலக அனுபவம் எப்படி போதுமானதாகும்?

அவளுக்கு உலக அனுபவம் இருந்து இருந்தால்.. தன் சாதி மக்கள் பற்றி நன்றே அறிந்து இருப்பாள். அவள் என்னவோ..நாளுக்கு நாள் உலகம் முன்னேறுகிறது. நம் சாதியும் முன்னேறிவிட்டது! நம் சாதி மக்களுக்கும் மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது! அவர்களுக்கு சாதி வெறி தணிந்து இருக்கும் என்று நம்பிவிட்டாள்! அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! 

காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது. காதலனால், அவன் அன்பால் தன் மனம் சந்தோஷம் அடைவதால்  அவள் அவனைக் காதலித்தாள்! காதலன் சாதி அவள் கண்ணுக்குத் தெரியவில்லை!  தான் விரும்பியவனை தைரியமாக கல்யாணமும் செய்துகொண்டாள்.

அவளை வாழவிடுமா அவள் சமூகம்? 

வாழவிட்டதா அவள் சாதி சனம்?  

நமது சமுதாயத்தில் ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை! ஏன் அவளுக்குத் தெரியவில்லை? திரும்பத் திரும்ப சொல்லணுமா? அவள் ஒரு சிறுமி! அவளுக்கு உலக அனுபவம் பத்தாது! யார் அவள் உணர்வுகளை மதிப்பதில்லை!  அவளைப் பெற்றெடுத்தவர்களே! அவளுடைய சொந்த பந்தம்! அவர்கள் சாதி சனம். அவர்கள் சாதித்தலைவர்கள்!  

யார் இவர்கள் எல்லாம்?  

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்ய அவளைவிடத் தனக்குத்தான் அதிக உரிமையுண்டு என்று நம்பும், சாதி வெறி பிடித்து அலையும் முட்டாள்கள்!

அறியாமையில் வாழ்ந்த அவள் தந்தை, காதல் திருமணம் செய்தது ஏதோ கொலைக்குற்றம் செய்ததுபோல்,  மகளைப் பற்றி கவலைப்படாமல், தான் இல்லையென்றால் அவள் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று கொஞ்சம்கூட யோசிக்காமல்,  முட்டாள்த்தனமாக தன்னை மாய்த்துக் கொண்டார்!

அதன் பிறகு அவள் சொந்த பந்தம், சாதி சனம், சாதித்தலைவர்கள் எல்லாம் அவள் அனுபவமற்ற இளமனதை "இந்த எழவை" பயன்படுத்தி அவளைக் குற்றவாளியாக்கி, அவள் மனதை கலைத்துவிட்டு , அவளைக் குழப்பி, அவள் நிம்மதியை பறித்து அவளை நடமாடும் பிணமாகவும், மன நோயாளியாகவும், ஆக்கிவிட்டார்கள். மேலும் அவள் தந்தை மரணத்திற்கு அவளே காரணம் என்பதுபோல் அவளை பலவாறு சாடி,  அவளை நம்பவும் வைத்து விட்டார்கள்!

அனுபவமற்ற இளம் பெண் அவள்!  என்ன செய்வாள் பாவம்? அவள் செய்யாத தவறுக்கு "நல்ல தீர்வு" என்று அவள் சாதி சனம் சொன்ன "தீர்வை" அவள் தன் முடிவாகச் சொன்னாள்! வேறு வழியில்லாமல்,  தன் காதலனை, கணவனை கைவிட்டாள்! அவளுக்குத் தெரியாது, அவள் காதலனுக்கும் இவ்வுலகில் அவளில்லாமல் வாழ முடியாது என்று! அவளுக்குத் தெரியாது! அவனும் ஒரு கோழை என்று.

பொதுவாக பெண்களுக்கு "ஆண்கள் ஏன் இப்படி பெண்களை அடிமைப் படுத்தினார்கள்?" என்பது தெரியாது. ஆண் கவிஞர்கள் எல்லாம் "ஏன் பெண்களை அரக்கியாகவும் இரக்கமில்லாதவர் களாகவும் ஆக்கி ரசிக்கிறார்கள்?" என்பதும் தெரியாது! 

ஆண்கள், பெண்களை விட மனபலம் எதுவுமில்லாத பலஹீனமானவர்கள்!  கோழைகள்! என்பதே உண்மை.

புரிந்துகொள்! கலப்புத் திருமணம், காதல் திருமணம் எல்லாம் நம் சமூகத்தில் இல்லாமல் இல்லை! இப்போவும் நடந்துகொண்டுதான் இருக்கு. அந்த  அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!   அதுவும் சாதி வெறி பிடித்தலையும் உன்  காட்டுமிராண்டி சமூகத்தில் எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை!

ஒரு சில படித்த பண்புள்ள அப்பாகள், அம்மாக்கள் ஊர் உலகத்தை, சாதி சனங்களை தூக்கி எறிந்துவிட்டு தன் ம்களின் அப்போதைய சந்தோஷத்தை (நாளைக்கு அவர்கள் எப்படி உணருவார்களோ? என்கிற கேள்விகள் இருந்தாலும்) மதித்து திருமணம் செய்து வைக்கிறார்கள். நிற்க, நாளைக்கு அதே திருமணம் மணமுறிவில் முடிந்தாலும், அதையும் ஏற்றுக் கொண்டு, அதற்கானதை செய்யும் படிப்பறிவுள்ள, பண்புள்ள அப்பா அம்மாக்கள் எல்லாம் தமிழர்களில் இருக்காங்க. அந்தளவுக்கு பக்குவம் அடைந்த, ஊர் உலக்த்தை சுச்சமாக மதிக்கும் அப்பா அம்மாக்கள் மிகவும் சொற்பமே.

இன்னொன்று புரிந்து கொள்..

உன் தந்தை ஒரு ஆண்!  மனதைரியமில்லாதவர்! தன் மகளுக்காக, இந்த சமுதாயத்தை எதிர்த்து போரிட தைரியமில்லாத ஒரு கோழை!

உன் முன்னால் காதலன், முன்னால் கணவன், அவனும் ஒரு ஆண்! ஒரு கோழைதான்!

ஆண்கள் கோழைகள் என்று தெரிந்து கொள்! கோழைகளைப் பார்த்து பரிதாபப்படுவதால் நீயும் கோழையாக வேண்டிய கட்டாய சூழல் உனக்கு! இந்த உலகை இனிமேலாவது புரிந்துகொள்! நடந்தவைகள் எதுவுமே உன் தவறல்ல! காதலிப்பது தவறல்ல! காதலித்த காதலனை மணப்பதும் தவறல்ல!  அதன் பிறகு ஏற்பட்ட உயிரிழப்புகள்? அது அவரவர் எடுத்த முடிவு! அவர்கள் தலை எழுத்து! கோழைகள் சாகட்டும் விடு! நீ வாழக்கற்றுக்கொள்! வாழ்ந்து காட்டு!

9 comments:

கவியாழி said...

காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது///
உண்மைதான் இது பருவ வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியுமே ஆகும்

கரந்தை ஜெயக்குமார் said...

என்று தணியும் இந்த சாதியின் மோகம்?

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***கரந்தை ஜெயக்குமார் said...

என்று தணியும் இந்த சாதியின் மோகம்?***

நம் வாழ்நாளில் தணியுமா என்பது சந்தேகம்தான். அதுக்காக இந்த சாதி வெறி பிடித்தலையும் முட்டாள்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது. நாம் எழுதும் ஒவ்வொரு கருத்தும் 100 ஆண்டுகள் கழித்து இதை வாசிப்பார்கள் என்பதை மனதில் கொள்ளணும்!

வருண் said...

**** கவியாழி கண்ணதாசன் said...

காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது///
உண்மைதான் இது பருவ வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியுமே ஆகும்***

வன்னியர்கள் மட்டும் மோசம்னு நாம் சொல்ல முடியாது, நான் சொல்ல மாட்டேன். ஒரு சில பெரிய மனிதர்கள் இடும் பின்னூட்டத்தை கவனிச்சீங்கனா வயதான கிழங்களில் முக்கால்வாசிக்கும்மேலே எல்லாமே அயோக்கியர்கள்னு தெளிவாகத் தெரியும். :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சொல்வதும் சரிதான். பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் கோழைகள்தான்.
என்னைப் பொருத்தவரை உயிரை விடக் கூடிய அளவுக்கு காதல் உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் தெரியவில்லை.

'பரிவை' சே.குமார் said...

சாதியின் முன்னே காதல் வாழ முடியவில்லை....

வருண் said...

****T.N.MURALIDHARAN said...

நீங்கள் சொல்வதும் சரிதான். பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் கோழைகள்தான்.
என்னைப் பொருத்தவரை உயிரை விடக் கூடிய அளவுக்கு காதல் உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் தெரியவில்லை.****

சமுதாயம், சொந்த பந்தம், அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து பெண்களை ஒருமாதிரி கன்விண்ஸ்ப் பண்ணி, காதலனை கழட்டிவிட வைப்பது காலங்காலமா நடந்துகொண்டுதான் இருக்கு.

ஒரு பெண் ஒரு ஆணிடம் தன்னையே கொடுத்த பிறகு அவளைப் பிரிப்பது எந்த வகையில் இந்தப் பிழையைச் சரியாகும்?

தற்கொலையை நான் என்றுமே சரி என்ரு சொல்லமாட்டேன். அது இளவரசன் செய்தாலும் சரி, திவ்யா அப்பா செய்தாலும் சரி. தற்கொலையால் தான் ஒரு கோழை என்று நிரூபிப்பதைத்தவிர வேறென்ன சாதிக்க முடியும்?

வருண் said...

****சே. குமார் said...

சாதியின் முன்னே காதல் வாழ முடியவில்லை....****

21ம் நூற்றாண்டில்கூட இப்படியெல்லாம் காட்டுமிராண்டியாக தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்னு வரலாறு சொல்லும்!