Saturday, January 24, 2009

தெய்வம் நின்று கேட்குமா? (2)

நான் நண்பன் மணியுடன் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது எதிரில் அண்ணன் சாமிநாதன் வந்தார். சாமிநாதன் அண்ணன் அப்பாவுடைய நண்பர். அந்தக்காலத்தில் அப்பா அவருக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அப்பாவின் உதவியில் கரஸ்ப்பாண்டென்ஸ்ல படித்து எம் ஏ முடித்தாராம். அப்பாவின் உதவியில் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸ் பண்ணினாராம். இப்போ பி டபிள்யூ டி ல ஹெட்க்ளார்க்கா இருக்கார் அண்ணன் சாமிநாதன். ஆனா அண்ணன் இன்னும் நன்றியோட இருப்பார். இன்னைக்கும் என்னிடம் பேசும்போது அப்பாவுடைய நல்ல மனசால்தான் “நீங்க படிச்சு நல்லா இருக்கீங்க தம்பி” னு அடிக்கடி சொல்லுவார்.

“வாங்க ரவி! என்ன வாக்கிங்கா? அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க. ஆளு கொஞ்சம் நிறமா, நல்லா கொஞ்சம் பூசினாற்போல இருக்கீங்க, தம்பி!” என்றார் அன்புடன்.

“வாங்க சாமிநாதன் அண்ணே! நல்லா இருக்கீங்களா?”

“இருக்கேன் தம்பி! ஆமா தம்பி அங்கே நீங்க இருக்கிற வேலை பார்க்கிற இடத்தில் இந்த "நீக்ரோ"க்கள் எல்லாம் இருப்பாங்களா? அவங்க ரொம்ப க்ரைம்லாம் பண்ணுவாங்க, துப்பாக்கியோட திரியுவாங்க, ரொம்ப மோசம் அது இதுனு னு சொல்றாங்களே தம்பி?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் பயமில்லை அண்ணன். என் நண்பர்களே அவர்களில் இருக்காங்க! ஒரு சிலர்தான் மோசம். ரொம்ப நல்லவர்களும் இருக்காங்க அண்ணே! அப்புறம் அண்ணே! அவர்களை "நீக்ரோ"னு சொல்லக்கூடாது! அது அவர்களை அவமானப்படுத்துவது போல!” என்றேன் புன்னகையுடன்.

“என்ன தம்பி! அவங்கல்லாம் ஆஃப்ரிக்காவில் இருந்து வெள்ளைக்காரன் கொண்டு வந்து வெள்ளைக்காரன் ட்ட அடிமையா இருந்தவர்கள்தானே தம்பி? வேற எப்படி சொல்வது தம்பி அவர்களை?”

“கறுப்பர்கள்னு சொல்லலாம் அண்ணே! இல்லைனா ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் நு சொல்லுவாங்க! நீக்ரோனு சொன்னால் அது அமெரிக்காவில் தவறு”

“என்ன தம்பி சொல்றீங்க நீங்க? கறுப்பர் நு சொன்னாத்தான் அவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கு தம்பி” என்றார் அண்ணன்.

“உண்மைதான் அண்ணன்! சரி விடுங்கண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லோரும் நலமா?”

“நான் அந்த ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன் தம்பி. நீங்க என்ன யாரையும் வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணிட்டு வந்திடாதீங்க. தம்பி! அப்பாவிடம் நான் அடிக்கடி உங்களைப்பத்தி விசாரிப்பேன், தம்பி” .

“ஏன் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணினால் என்ன பெரிய தப்பு, அண்ணே? அவங்கள்லயும் நிறைய நல்லவர்களும் இருக்காங்க அண்ணே!” என்றேன் சிரித்துக்கொண்டே.

“என்ன தம்பி இப்படி வம்பு பேசுறீங்களே? அண்ணன் வயசில் மூத்தவன் சொல்றேன் கேளுங்க தம்பி! அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது தம்பி. நல்ல தமிழ்பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோங்க தம்பி. அப்போத்தான் அழகா லட்சணமா இருக்கும். அப்பா அம்மா ஊரில் தலைநிமிர்ந்து நடக்க முடியும் இல்லையா தம்பி?”

“உண்மைதான் அண்ணே! சரி வீட்டுக்கு வாங்க அண்ணே!”

“சரி தம்பி அப்பாவை நான் கேட்டதா சொல்லுங்க! அப்பாதான் எனக்கு அந்தக்காலத்தில் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தவர். நீங்க அமெரிக்கா போனால் என்ன? எவ்வளவு படிச்சா என்ன தம்பி? அப்பா அறிவில் உங்களுக்கு பாதிகூட இருக்குமானு தெரியலை. உங்க அப்பாதான் பெரிய அறிவாளி, தம்பி! அவரால்தான் அண்ணன் இன்னைக்கு இந்த நிலையில் இருக்கேன் தம்பி! சரி தம்பி பார்க்கலாம்” என்று அப்பாவை இன்னொருமுறை புகழ்ந்துவிட்டு நடந்தார்.

பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலுள்ள ஒரு பேக்கரில உள்ளே போய், இரண்டு காஃபி ஆர்டர்பண்ணி நானும் நண்பன் மணியும் அமர்ந்தோம். இதுபோல் பேக்கரிக்குள் முன்பெல்லாம் ஆண்கள் மட்டும்தான் வந்து அமர்வார்கள். ஆனால் இன்று கேர்ல்ஸ் எல்லாம் செட்டாக வந்து காபி குடித்துவிட்டு அரட்டை அடித்துவிட்டு போவதுபோல் இருந்தது. ஊர் நிறையவே முன்னேறி இருப்பது தெரிந்தது.

“சரிடா மணி, நம்ம சாமிநாதன் அண்ணனோட அண்ணன் மகன் முருகதாஸ் எங்கடா? பாம்பே ல இருக்கிறானா?

“அந்த ரஜினி ஸ்டுடியோ முருகதாஸா?”

“ஆமடா, அவன் கடையில் உட்கார்ந்துதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவோம் இல்லையா? இப்போ எங்கே இருக்கான்?”

“அவன் திடீர்னு எதோ காய்ச்சல்ல படுத்தான். திடீர்னு உலகத்தைவிட்டே போய் சேர்ந்துட்டான். டாக்டர் என்ன வியாதி என்னனு தெளிவா சொல்லல. உடம்புல எதிர்ப்பு சக்தியே இல்லையாம்டா. என்ன காய்ச்சல்னு தெரியலை”

“என்னடா சொல்ற?!'

“அவன் ஆடாத ஆட்டமா? ஸ்டுடியோவிலே எத்தனை கிராமத்து பெண்களை கரெக்ட்பண்ணி இருக்கான் தெரியுமா? இங்கே ஸ்டுடியோவிலிருந்து விலகி பாம்பேல போய் ஏதோ கப்பல்ல எல்லாம் கொஞ்ச நாள் வேலை பார்த்தாண்டா. அப்புறம் ஒரு 5 வருசத்திலே ஊருக்கு திரும்பி வந்தான். கண்டவளோட படுத்து எந்திரிக்கிற டைப் இல்லையா? பாம்பேல போய் யார்ட்ட படுத்தானோ, என்னவோ போ!”

“எதுவும் எயிட்ஸ் கியிட்ஸ் வந்துருச்சா என்னடா மணி?”

“அதெல்லாம் இல்லைடா! எல்லாருக்கும் வர்ற காய்ச்சல்தான் இவனுக்கும் வந்தது. கேன்சர்மாதிரி எதுவும் பெரிய வியாதி யெல்லாம் இல்லடா, ரவி”

“என்னவோ போ! ஊரில் நமக்கு தெரிந்தவர்களே நிறையப்பேர் போய் சேர்ந்துட்டானுக போல!"

2 comments:

நித்தி .. said...

என்ன தம்பி இப்படி வம்பு பேசுறீங்களே? அண்ணன் வயசில் மூத்தவன் சொல்றேன் கேளுங்க தம்பி! அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது தம்பி. நல்ல தமிழ்பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோங்க தம்பி. அப்போத்தான் அழகா லட்சணமா இருக்கும். அப்பா அம்மா ஊரில் தலைநிமிர்ந்து நடக்க முடியும் இல்லையா தம்பி?”

apppaa...ethanai thambi???
romba nallruku varun...
unga eluthu nadai kan mun picturise panuthu ellathai yum..
valthukal..

வருண் said...

vaangka nithi!

nIngka sonnathumthaan kavaniththEn. aamaa, eegappatta "thambi" irukku! LOL.

They think they respect and love you by addressing you like that. They wont talk like that if you live in the hometown. They kind of give you so much respect when you visit from a foreign country.:)

Thanks for your comment!