Monday, January 19, 2009

எம் ஜி ஆர் vs ரஜினி (1)

எம் ஜி ஆர், ரஜினி இருவரும் தமிழ் திரையுலகில் தலை சிறந்த பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் கொடுத்தவர்கள். ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் வேற்றுமைகள்தான் அதிகம். ரஜினி, எம் ஜி ஆர் போல் என்று சொல்வது எனக்கு அர்த்தமில்லாமல் தோன்றும்.

ஃ எம் ஜி ஆர் நல்ல வெள்ளை நிறம்! ரஜினி நல்ல கறுப்பு!

ஃ எம் ஜி ஆர் மேக்-அப் போடாமல் வெளியே வருவதில்லை! ரஜினி தன் வழுக்கைத்தலையை மறைக்க ரொம்ப மெனெக்கட்டுக்கொள்வதில்லை.

ஃ எம் ஜி ஆர் ஒரு இலங்கையில் பிறந்த மலையாளி! ரஜினி கர்நாடகாவில் பிறந்த மராத்திக்காரர்! இருவரையும் வாழவைத்தது தமிழ்நாட்டு மக்கள் ரசனை.

ஃ எம் ஜி ஆர் பேசியது சுத்தமான தமிழ். ரஜினியின் தமிழ் உச்சரிப்பு ரொம்ப சுமார்தான்.

ஃ எம் ஜி ஆர் நடிக்க வந்த முதல்ப்படம் சதிலீலாவதி (1936). அவர் 100 வது படம் ஒளி விளக்கு (1968). அதாவது 32 வருட சினிமா அனுபவத்திற்கு பிறகுதான் 100 வது படத்தை தொட்டார். எம் ஜி ஆர் மிகக்கவனமாக தமிழ்ப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர். ரஜினியின் முதல்ப்படம் அபூர்வ ராகங்கள் (1975)! கிடைத்த வில்லன் கதாநாயகன் கதாபாத்திரங்களை எடுத்து கவனக்குறைவாக நடித்தவர். இவரின் 100 வது படம் ஸ்ரி ராகவேந்திரா (1985). சுமார் 10 வருடங்களில் 100 வது படத்தில் நடித்தவர்.

ஃ எம் ஜி ஆர் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எதிலும் நடித்து, "என்ன ஒரு நடிப்பு!" என்கிற புகழ் அடைந்ததே இல்லை. இருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்திற்கு சிறந்த நடிகர் என்கிற நேஷனல் அவார்ட் பெற்றவர். ரஜினி முள்ளும் மலரும், 16 வயதினிலே, 6 லிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் நடித்து தனக்கு நடிக்கவும் தெரியும் என்று எல்லோரையும் நடிப்பில் திருப்திப்படுத்தியவர்! ஆனால் இவரும், நடிகர் திலகம் சிவாஜியும் சிறந்த நடிகருக்கான நேஷனல் அவார்ட் வாங்கியதில்லை.

ஃ எம் ஜி ஆர் திரையில் புகைப்பிடிப்பதில்லை! குடிப்பதும் கிடையாது! ரொம்ப நல்லவராக, கதாநாயகன் இமேஜை எப்போதும் கவனமாக பார்த்து நடித்தவர். ரஜினி, புகைப்பிடித்தே பெரிய ஸ்டார் ஆனவர்! இவர் பாபாவிற்கு பிறகு திரு ராமதாஸின் க்ரிட்டிசிஸத்தை “மதித்து” புகைபிடிப்பதை நிறுத்தியவர். இவர் குடித்து பாடும் பாடல்களில் எப்போதுமே ஜொளிப்பவர் (உதாரணம்: முள்ளும் மலரும், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, படையப்பா). வில்லனாக நடிக்க ஆரம்பித்து கதாநாயகனாக ஆனவர்.

ஃ எம் ஜி ஆர் “தாயில்லாமல் நானில்லை” என்கிற புலமைப்பித்தன் எழுதிய பாடலில் (அடிமைப்பெண், 1969) நடித்து தாய் உள்ளங்களை கவர்ந்தவர். ரஜினி “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்கிற வாலி பாடலில் (மன்னன், 1992) நடித்து தாய்க்குலங்களை கவர்ந்தவர்.

ஃ எம் ஜி ஆர் க்கு 3 மனைவிகள்-ஒரே நேரத்தில் இல்லை! ஒரு குழந்தை பிறந்து இறந்ததாக சொல்கிறார்கள். ஆனால் அவருக்கு பிறந்த வாரிசு யாரும் உயிருடன் இல்லை. இது இவருக்கு மிகப்பெரிய பலமானது என்பதுகூட உண்மை. ரஜினிக்கு ஒரே மனைவி! எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா என்கிற பிராமணப்பெண்ணை காதல் திருமணம் செய்தவர். இவருக்கு இரண்டு மகள்கள்.

ஃ எம் ஜி ஆர் திராவிட கட்சியில் இருந்து வந்ததால் தன்னை நாத்தீகராகவே வெளிக்காட்டி, கடவுள் நம்பிக்கை உள்ளவராக காட்டியதே இல்லை. ஆனால் இவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததாக சொல்லப்படுகிறது. ரஜினி தன்னை ஒரு ஹிந்து என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும், இந்து மதத்திலும், கடவுளிலும் நம்பிக்கை உள்ள ஒரு ஆத்தீகவாதி. இவர் சில மனிதக் கடவுள்களையும் நம்புகிறவர். இமயமலைக்கு சென்று தியானம் செய்பவர். திருப்பதி கோயிலுக்கும், ராகவேந்திரா கோயிலுக்கும் போய் வருபவர்.

ஃ எம் ஜி ஆர் அரசியலுக்கு துணிந்து வந்தவர். பெரு வெற்றி அடைந்தவர். ரஜினி அரசியலில் குரல் கொடுப்பதோடு சரி. அரசியலுக்கு வருவார் என்று நான் நம்பவில்லை. அரசியலை பொறுத்தவரையில் இவர் இன்னும் வெற்றியடையவில்லை!

ஃ எம் ஜி ஆர் ஈழத் தமிழர்களால் மதிக்கப்படுபவர். ரஜினி, ஈழத் தமிழர்கள் பற்றி எதுவும் பேசாமலும், சோ ராமசாமியுடன் நட்பு பாராட்டுவதாலும், ஈழத் தமிழரின் எதிரி என்று கூட நம்பப்பட்டவர். சமீபத்தில் இவர் ஈழத் தமிழர்களுக்கு கொடுத்த குரல் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது!

ஃ எம் ஜி ஆர் தமிழ் படங்களில் மட்டும்தான் பொதுவாக நடித்தார். ரஜினி ஹிந்திப் படங்களிலும் பல தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார். எம் ஜி ஆர் நடித்த தமிழ்ப்படங்கள் சுமார் 136. ரஜினி கதாநாயகனாக நடித்த தமிழ் பட்ங்கள் சுமார் 75-80 இருக்கும்னு நினைக்கிறேன்.

ஃ எம் ஜி ஆர் பொன்மன செம்மல்,கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்று பலராலும் பாராட்டப்பட்ட ஒரு வள்ளல் பாரி வ¨கையை சேர்ந்தவர். ரஜினி தன்னால் ஆன உதவி செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கு அப்படி எதுவும் நல்ல பெயர் இதுவரை வரவில்லை.

ஃ எம் ஜி ஆருடைய கெட்ட புத்தகத்தில் போனால் தன்னைவிட வலிமையில்லாத துணை நடிகர்களை, நடிகைகளை ஒழித்துவிடுவார். மன்னிக்கவே மாட்டார். அவருக்கு இரக்க குணம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ரஜினி, அதுபோல் யாரையும் ஒழித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக உதவி செய்தாரோ இல்லையோ, யாரையும் கெடுத்ததாக யாரும் இதுவரை புலம்பவில்லை.

-தொடரும்

18 comments:

Bleachingpowder said...

நல்ல ஓப்பீடு. வாழ்த்துகள்

வருண் said...

***Bleachingpowder said...
நல்ல ஓப்பீடு. வாழ்த்துகள்

19 January, 2009 8:52 PM***

நன்றி, Bleachingpowder :-)

Anonymous said...

ரஜினி, அதுபோல் யாரையும் ஒழித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக உதவி செய்தாரோ இல்லையோ, யாரையும் கெடுத்ததாக யாரும் இதுவரை புலம்பவில்லை.

Anonymous said...

'ரஜினி, அதுபோல் யாரையும் ஒழித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக உதவி செய்தாரோ இல்லையோ, யாரையும் கெடுத்ததாக யாரும் இதுவரை புலம்பவில்லை'
last line itself enough for us to cherish.

KarthigaVasudevan said...

//எம் ஜி ஆருடைய கெட்ட புத்தகத்தில் போனால் தன்னைவிட வலிமையில்லாத துணை நடிகர்களை, நடிகைகளை ஒழித்துவிடுவார். மன்னிக்கவே மாட்டார். அவருக்கு இரக்க குணம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ரஜினி, அதுபோல் யாரையும் ஒழித்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக உதவி செய்தாரோ இல்லையோ, யாரையும் கெடுத்ததாக யாரும் இதுவரை புலம்பவில்லை.//

எம்.ஜி.ஆர் ஏன் தன்னை விட வலிமை குறைந்தவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கணும்? உதாரணங்கள் இருக்கா வருண்? எனக்குத் தெரிஞ்சு அவர் ஜி. அசோகனின் சினிமா வாழ்வை அழித்தார்னு கேள்விப்பட்டதுண்டு ,அப்போ எம்.ஜி.ஆரோட ஹீரோயிசம் ... நல்ல தனம் எல்லாம் திரைக்கு வெளில தானா?

ரிஷபன்Meena said...

ரஜினிக்கு நன்றாக நடிக்க வரும். காமெடி நடிப்பிலும் வெளுத்துக் கட்டுவார். எம்.ஜி.ஆர் போலில்லாமல் கொஞ்சம் ஆடவும் தெரியும்

Shree said...

Point 3... Rajini's childhood was in in Karnataka... but was born in a very small village near Krishnagiri...So, tamizhnaatil pirandha maratiyar

வருண் said...

***last line itself enough for us to cherish.***

True, anony! :-)

வருண் said...

***மிஸஸ்.டவுட் said...
எம்.ஜி.ஆர் ஏன் தன்னை விட வலிமை குறைந்தவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கணும்? உதாரணங்கள் இருக்கா வருண்? எனக்குத் தெரிஞ்சு அவர் ஜி. அசோகனின் சினிமா வாழ்வை அழித்தார்னு கேள்விப்பட்டதுண்டு ,அப்போ எம்.ஜி.ஆரோட ஹீரோயிசம் ... நல்ல தனம் எல்லாம் திரைக்கு வெளில தானா?

19 January, 2009 9:41 PM***

மிஸஸ் டவுட்: அசோகனின் "நேற்று இன்று நாளை" பிரச்சினை ஓரளவுக்கு வெளியில் வந்தது. இதுபோல் நிறைய துணை நடிகர்கள் பாதிக்கப்பட்டது உண்மை என்ற பல "சோர்ஸ்கள்" சொல்லுகின்றன.

அவர்கள் தன் தவறுக்காக மனம்வருந்தி மன்னிப்புக்கேட்டாலும் எதுவும் நடப்பதில்லை என்கிறார்கள்! :-(

வருண் said...

***ரிஷபன் said...
ரஜினிக்கு நன்றாக நடிக்க வரும். காமெடி நடிப்பிலும் வெளுத்துக் கட்டுவார். எம்.ஜி.ஆர் போலில்லாமல் கொஞ்சம் ஆடவும் தெரியும்

20 January, 2009 2:14 AM ***

ரிஷபன்:

ரஜினிக்கு காமெடி பண்ணத்தெரியும் என்பதும் உண்மைதான்.

தில்லுமுல்லு, தம்பிக்கு எந்த ஊர் போன்ற முழுநீளக்காமெடிப்படங்கள் வந்து வெற்றியடைந்தன.

எம் ஜி ஆர் அப்படி எதுவும் காமெடி ரோல் செய்து யார் மனதையும் காமெடியில் கவர்ந்ததாக தெரியவில்லை!

வருண் said...

***Shree said...
Point 3... Rajini's childhood was in in Karnataka... but was born in a very small village near Krishnagiri...So, tamizhnaatil pirandha maratiyar

20 January, 2009 2:51 AM***

I never heard of this before, Shree! :-) Good to now that if that is true! :-)

Shree said...

He was born in a village called Nachikuppam near Krishnagiri

http://www.zimbio.com/Tamil+Movies/articles/1927/Rajinikanth+may+consider+political+entry+after


http://discuss.itacumens.com/index.php?topic=43179.0

வருண் said...

Thank you very much for the lin, Shree! :)

ராஜ நடராஜன் said...

மாஸ் அப்பீல் தவிர இருவருக்குமே நிறைய முரண்.

வருண் said...

***ராஜ நடராஜன் said...
மாஸ் அப்பீல் தவிர இருவருக்குமே நிறைய முரண்.

21 January, 2009 7:35 AM***

உண்மை, நடராஜன்! :-)

என்.இனியவன் said...

பாரபட்சம் இல்லாத ஒப்பீடு.

வருண் said...

***என்.இனியவன் said...
பாரபட்சம் இல்லாத ஒப்பீடு.

21 January, 2009 9:41 AM***

நன்றி, இனியவன் :-)

கடும் விமர்சகர் வெங்குடு said...

நல்ல ஒப்பீடு. எனக்கு தெரிந்த சில தகவல்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
* ரஜினி கதா நாயகனாக நடித்த 100 வது படம் ”சிவாஜி”

*ரஜினி பெங்களூரில் பிறந்த மரத்தியர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் பிறந்தவர் இல்லை, அவரது தந்தை போன்ற முன்னோர்கள் கிருஷ்ணகிரியில் வசித்துள்ளனர்.

* ரஜினி பலவிதமான உதவிகளையும் செய்து வருகின்றார் (எனக்கு தெரிந்த வகையில் சென்ற ஆண்டு 25 பேருக்கு பொறியியல் படிக்க முழு உதவி செய்ததாக அறிந்தேன்)

* அவர் தன்னை பற்றி விளம்பரம் செய்து கொள்வதில் “உண்மையிலேயே” விருப்பம் இல்லாதவர்.
(பாவலா செய்யும் ஆள் இல்லை)