Tuesday, March 3, 2009

அந்த பகவான்தான் அருள் புரியனும்!

"என்ன ஆச்சு, நம்ம ராமன் செட்டியார் கடையிலே ஒரு சரக்கையும் காணோம். என்ன கேட்டாலும் இல்லைனு சொல்றாங்க ?"

"அவர் அவ்ளோதான். ஊரெல்லாம் கடன். எவனும் சரக்கு தர மாட்டேன்கிறனாம். அந்த ஜவுளிக்கடையையும் எடுத்துட்டார்"

"என்னடா ஆச்சு? என்ன சூதாடினாரா இல்லை வேற மாதிரி காசை விட்டுட்டாரா?"

"நீ வேற அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் டெடையாது!"

"வேற என்ன சத்யம் ஸ்டாக்லயா எல்லாத்தையும் விட்டாரு?"

" இவர் பழய காலத்து ஆளு! ஸ்டாக் மார்க்கட்ல எல்லாம் பணம் போடுறதில்லப்பா! என்ன அவருக்கு மூனு பொண்ணுங்க. அவங்க மூனு பேருக்கும் 150 சவரன் நகை, வைர மூக்குத்தி, 50 பட்டு னு எடுத்து தடபுடலா கல்யாணம் பண்ணினார். கணக்கு வழக்கு இல்லாம கல்யாணத்துக்கு செலவழிச்சதாலே இப்போ தெருவுக்கு வந்துட்டார்னு சொல்றாங்க"

"என்னப்பா சொல்ற? கல்யாணத்தை கொஞ்சம் ஆடம்பரம் கொறச்சு தன்னிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றார்போல் செய்தால் என்ன?"

"இந்தா பாரு, இப்போ நம்ம ஊரில் எல்லோருக்கும் கழண்டுருச்சு. நம்மால எவ்வளவு அஃபோர்ட் பண்ண முடியும்னே இவங்களுக்கு தெரியலை. முதல்ல அவர் மூத்த பொண்ணுக்கு பெரிய இடமா பார்த்து செஞ்சாரு. அப்போ கையிலே ரொக்கப்பணம் நெறைய இருந்ததால் அவரால் கடன் இல்லாம நல்லா செய்ய முடிஞ்சது. அடுத்த வருடமே நல்ல வரன் வந்ததுனு அடுத்த பொண்ணுக்கு கல்யாணம். மூத்த பெண்ணுக்கு செய்தது போல் செய்யனும்னு கடன உடன வாங்கி அதையும் பெருசாத்தான் செஞ்சாரு. அப்போவே கடன திருப்பி கொடுக்க முடியலை. அதோட நிறுத்தி இருக்கலாம். கடசில மூனாவது பொண்ணுக்கும் 2 வருசம் முன்னாலே கல்யாணம். அதுக்கும் எந்த குறையில்லாமல் செய்யனும்னு கந்து வட்டிக்கு வாங்கி செஞ்சாரு. இப்போ தெருவுக்கு வந்துட்டாரு"

"அப்படி என்னத்ததான் பெருசா செஞ்சாரு?"

"அது மாதிரி கல்யாணம் நம்ம ஊரில் இதுக்கு முன்னால நடக்கலைனு சொல்றாங்கப்பா! ஒரு 10000 பேருக்கு சாப்பாடு, பாட்டு கச்சேரி, வான வேடிக்கை, அது இதுனு பெருசா செஞ்சாருப்பா. இதுல சொந்த பந்தம் எல்லோருக்கும் பட்டுச்சேலை பட்டு வேட்டினு வேற. அதை ஏன் கேக்கிற ரொம்ப ஆடம்பரம்"

"கைல காசு இல்லாமலா இதெல்லாம் செஞ்சாரு? கல்யாணத்துக்கு ஆகிற செலவுக்கு எதாவது சொத்த கித்த விக்கலையா?"

"அவர் மனைவி நகையை எல்லாம் அழிச்சு செஞ்சாருனு சொல்றாங்க. அவங்க என்ன ஒரு 80 சவரன் வச்சிருந்தாங்களாம். ஆனா சொத்து எதையும் வித்து கல்யாணம் செய்தால் ஊர்ல அவமானமா போயிடும்னு, காதும் காதும் வச்ச மாதிரி கந்துவட்டிக்கு வாங்கி செஞ்சாரு. நம்ம ஆளுக தான் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறானே இப்போ (அநியாய வட்டிக்கு). அந்த வட்டியெல்லாம் இப்போ குட்டி போட்டு, வளர்ந்து எல்லாத்தையும் சாப்பிட்டுருச்சு"

"என்னப்பா செட்டியாருக்கே ஒரு கணக்கு வழக்கு தெரியாதா என்ன?"

"மாசச் சம்பளம் வாங்கிறவனுக்கு தெரியும் தான் சாகிற வரை எவ்ளோ சம்பாரிக்க முடியும்னு. இது போல் வியாபாரிகள் கணக்கு தப்பு கணக்காக்கிறது. எங்கேயோ அள்ளி சமாளிச்சிறலாம்னு அகலக்கால் வச்சுட்டார்னு சொல்றாங்க. அள்ள அள்ள வந்துக்கிட்டே வா இருக்கும்?"

"என்னவோ போ, திண்ணுகெட்ட குடும்பம்னு சொல்லுவாங்க, இப்போ கல்யாணம் பண்ணி கெட்ட குடும்பம்னு சொல்ல வேண்டியதுதான்!"

"சாதாரணமாக 20 சவரன் போட்டு ஒரு சாதாரண மாப்பிள்ளைக்கு செய்தால் இவங்களுக்கு அசிங்கமாம். இதுபோல் தடபுடலா செய்து பிச்சை எடுத்தாலும் அதுல இவனுகளுக்கு ஒரு பெருமைதான்!"

"என்ன பெருமை இருக்கு இதுல?"

"செட்டியார் வீட்டிலே ஒர் கல்யாணம் நடந்ததே அதுபோல் இதுவரை நம்ம ஊர்ல எவனும் நடத்தவே இல்லைனு ஊரே மெச்சனுமாம்"

"அது உண்மைதான் இப்போ அதனால் தெருவுக்கு வந்ததையும் சேர்த்துத்தான் பேசுவாங்க! மகள்க யாரும் திருப்பி எதுவும் இவருக்கு உதவி செய்வாங்களா? திருப்பி கடனை அடச்சு நல்லா ஆக ஏதாவது வழியிருக்கா?"

"கந்து வட்டிக்காரனுக்கு வட்டியும் மொதலுமா கொடுக்கவா? இப்போ நெறைய லாட்டரிச் சீட்டு வாங்குறாராம். பகவான் அருள் புரிவார்னு நம்பிக்கையோட தினமும் பேப்பர்ல பம்பர் லாட்டரி அடிக்குதானு பார்த்துக்கிட்டு இருக்கார்!"

"அது சரி! அந்த பகவான் தான் அருள் புரியனும்"

8 comments:

மணிகண்டன் said...

***
"அது சரி! அந்த பகவான் தான் அருள் புரியனும்"
***

நிச்சயமா. நம்பினார் கைவிட படார் !

வருண் said...

வாங்க மணிகண்டன்! :-)

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா னு சொல்றீங்களா?

ராமலக்ஷ்மி said...

கண்ணை மறைக்குது பெற்ற பாசம்னு சொல்வதா, வெட்டிப் பந்தா வீதிக்கு கொண்டு வந்தாலும் விடாது பற்றிக் கொண்டிருக்கும் ‘நம்பிக்கை’யை முட்டாள்ததனம் என்று சொல்வதா?
இப்படிக் கந்து வட்டிக் கடலுக்குள் மாட்டி வெளிவர முடியாமல் மூழ்கிப் போனவர்களைக் கண்ணால் பார்த்த பின்னும் அதில் விழப் பலரும் தயங்குவதே இல்லை:(!

நல்ல கதை வருண்!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
கண்ணை மறைக்குது பெற்ற பாசம்னு சொல்வதா, வெட்டிப் பந்தா வீதிக்கு கொண்டு வந்தாலும் விடாது பற்றிக் கொண்டிருக்கும் ‘நம்பிக்கை’யை முட்டாள்ததனம் என்று சொல்வதா?
இப்படிக் கந்து வட்டிக் கடலுக்குள் மாட்டி வெளிவர முடியாமல் மூழ்கிப் போனவர்களைக் கண்ணால் பார்த்த பின்னும் அதில் விழப் பலரும் தயங்குவதே இல்லை:(!

நல்ல கதை வருண்!***

வாங்க ராமலக்ஷ்மி!

ஆமாங்க, இதுபோல் கந்துவட்டி பிரச்சினை 20 வருடத்திற்கு முன்னால நம்மட்ட இல்லைனு சொல்றாங்க.

எயிட்ஸ் மாதிரி இது ஒரு புதிய வியாதி போலும் :-(

மணிகண்டன் said...

****
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா னு சொல்றீங்களா?
****

சில பேரு லட்ச கணக்குல பணம் வச்சிக்கிட்டு ரொம்ப புலம்பி கஷ்டப்பட்டுகிட்டு இருப்பாங்க. சில பேரு கோடி கணக்குல கடன் வச்சிக்கிட்டு மன தைரியத்தோட இருப்பாங்க. உங்க நாயகருக்கு அந்த தைரியம் இன்னும் கொஞ்ச நாள்ல வந்துடும்
( நிலைமை பழகிடும்) ! அது தான் என்னோட நம்பிக்கை. அதனால "நம்பினார் கைவிட படார்".

இதோட வேறு அர்த்தம் என்னனா "லூசுத்தனமா எதை வேணும்னாலும் செய்..அதுக்கு அப்புறம் நம்பிக்கை வை"

மணிகண்டன் said...

*****
இதுபோல் கந்துவட்டி பிரச்சினை 20 வருடத்திற்கு முன்னால நம்மட்ட இல்லைனு சொல்றாங்க.
*****

தவறான தகவல் வருண். நாங்க 85 ல ஒரு வீடு கட்டினோம். As usual, estimates காத்துல போச்சு. வீட பாதில நிறுத்தவும் முடியாது. அந்த சமயம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து உதவி செஞ்ச ஆபத்பாண்டவர்கள் நிறையவே இருந்தாங்க.

வருண் said...

****தவறான தகவல் வருண். நாங்க 85 ல ஒரு வீடு கட்டினோம். As usual, estimates காத்துல போச்சு. வீட பாதில நிறுத்தவும் முடியாது. அந்த சமயம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து உதவி செஞ்ச ஆபத்பாண்டவர்கள் நிறையவே இருந்தாங்க.

4 March, 2009 5:42 AM****

அப்படிங்களா?

எனக்கும் கடனுக்கும் ஒத்து வராதுங்க. க்ரிடிட் கார்ட்ல கூட ஒரு பைசா கடன் வைப்பதில்லை. :-)

வருண் said...

***சில பேரு லட்ச கணக்குல பணம் வச்சிக்கிட்டு ரொம்ப புலம்பி கஷ்டப்பட்டுகிட்டு இருப்பாங்க. சில பேரு கோடி கணக்குல கடன் வச்சிக்கிட்டு மன தைரியத்தோட இருப்பாங்க. உங்க நாயகருக்கு அந்த தைரியம் இன்னும் கொஞ்ச நாள்ல வந்துடும்
( நிலைமை பழகிடும்) !***

இப்போ என்ன ஆகுதுனா, 5 வருடத்தில் இந்த அநியாயவட்டியால், வட்டி மட்டும் முதலைவிட ரெண்டு மடங்காகிவிடுது.

இதேபோல் பலரிடமும் ஆகிவிடுவதால், இவர்கள் எதை வித்து என்ன செய்தாலும், கடனை திருப்பி அடைக்க முடியாத ஒரு நிலை ஆகிடுது.

திருப்பி கொடுக்க நினைத்தாலும் முடியாத நிலைமை ஆகிவிடுது :-(

ஒரு சில பேர் தொங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு, வாழ்கிறார்கள்!