பிருந்தா, அவளுடைய கணவனோட வந்திருந்தாள்! அவர், அவளுக்கேற்ற அழகு, மற்றும் உயரம். நல்ல நிறம். பார்ப்பதற்கு ரொம்பவே ஹேண்ட்சம்மாக இருந்தார். சந்தோஷமாக இருவரும் கோயில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.
நல்லவேளை, அவர்களை பார்த்தான், பார்த்தசாரதி. அவளும் அவனை கவனிக்கவில்லை! கவனிக்காமல் உள்ளே போய் அவளைப் பார்க்க நேர்ந்திருதால்? இங்கே எப்படி வந்தாள் இவள்? டாலஸிலிருந்து பிட்ஸ்பர்க் வந்துவிட்டாளா? சாரதி, கோயிலுக்குள் நுழையாமல் அப்படியே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். காரில் போகும்போது பழைய நினைவுகள்...
அவளுடன் பேசியவை, அவளுடன் விளையாண்டவை, அவளுக்கு எழுதிய கடிதங்கள், அவள் குரல், அவள் உதடுகள், அவள் கண்கள், அவள் பின்னழகு எல்லாம் ஞாபகம் வந்தது அவனுக்கு. இவ்வளவு நாளாக அவளை நினைக்காமல் மிகவும் கவனமாகத்தான் இருந்தான் . இன்று அவளைப் பார்த்ததால் அவன் நினைவலைகளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பிருந்தா ஒரு தனிப்பிறவி! சாரதி, எவ்வளவு கோபமாக இருந்தாலும் பேசினாலும் அவள் குரலை கேட்டவுடன் எல்லாம் போய்விடும் அவனுக்கு. அவள் ஒரு பார்வை கனிவாகப் பார்த்தாலே குற்ற உணர்வு வந்துவிடும் அவனுக்கு! அவளிடம் ஒரு மென்மை உண்டு! தேவையே இல்லாமல் வார்த்தையை வெளியே விடமாட்டாள். அவள் திட்டினால்கூட அதில் ஒரு அழகு! "உன்னைப் பிடிக்கவில்லை" னு சொல்வதுகூட கேட்பவர்களுக்கு பிடிக்கும்படி சொல்லுவாள். எதிலும் அவளிடம் ஒரு தனி அழகு உண்டு. இல்லை இல்லை அவனுக்கு பிருந்தா பைத்தியம் பிடித்து இருந்தது என்றுகூட சொல்லலாம்!
கரடு முரடு குணமுள்ள தனக்கு அவள் ஒருபோதும் தகுதியற்றவள் அல்ல என்று அவன் அடிக்கடி நினைப்பதுண்டு. அவன் பயந்ததுபோலவே எல்லாம் முடிந்துவிட்டது. ஆமாம் இதெல்லாம் வாழ்க்கை படிக்கட்டில் ஒரு பாடம். எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடைந்து கொள்ள முயற்சித்து ஓரளவுக்கு வெற்றியும் அடைந்தான்.
அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்தினான். காதல் என்பது ஒரு நிலையான ஒன்றல்ல! இன்று காதலர்கள்! நாளை கணவன் மனைவி! இன்னும் 10 வருடம் சென்று காதல் எல்லாம் மறைந்துவிடும்! எங்கே போகும்? தெரியவில்லை! எங்கோ போகும்! அதைத்தானே நேற்றைய காதலர்கள் இன்றைய தம்பதிகளிடம் பார்க்கிறோம்? நல்லவேளை அவனுக்கு அந்த நிலைமை ஆகப்போவதில்லை என்று முட்டாள் மாதிரி ஆறுதல் அடைந்துகொண்டான்
அவளை இழந்ததில் அவனுக்கு ஒரு வகையில் சந்தோசம். இன்னொரு வகையில் கவலை. அவனுக்கு சந்தோஷமும் கவலையும்.
தன்னைவிட தகுதியுள்ள ஒருவனிடம் தானே போய் சேர்ந்து இருக்கிறாள் என்று அவனுக்கு சந்தோஷம். ஆனால் அதே சமயத்தில் அவளுடன் 100% உறவை முறித்தது அவனுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியது அவனுக்குள். பல வருடங்களாக அவளைச்சுற்றியே அவன் சிறிய உலகம் இருந்ததால், இப்போது புது உலகம் தேடி அலைந்தான் இந்த பெரிய உலகத்தில்.
முதலில் இந்த ஊரை காலி பண்ணனும் என்று முடிவுக்கு வந்தான். ஏதாவது ஒரு மூலைக்கு போய்விட வேண்டியதுதான். இது மிகப்பெரிய உலகம் ஆச்சே. ஏன் முடியாது?
சாரதி, ரொம்ப சிம்பிள் கேரக்டர். பிடிக்கும் அல்லது பிடிக்காது. சிரிப்பு வரும் இல்லை எரிச்சல் வரும்! இப்போ ரொம்ப காம்ளிகேட்டெட் சிச்சுவேஷன் அவனுக்கு! பிடித்தவர்களை பிடிக்காமல் ஆக்க வேண்டும் என்பதுதான் அவனுக்கு சேலெஞ்ச்! ஏன்? அதுதான் சரி. எது? தனக்கு ரொம்ப பிடித்தவளை நினைக்காமல் இருப்பது! எப்படி? அவளை வெறுக்கனுமா? அதெப்படி வெறுப்பது? வேறென்ன செய்வது? மறக்கனும்! ஏன் மறக்கனும்? இனிமேல் உனக்கும் அவளுக்கும் என்ன இருக்கு? ஒண்ணுமே இல்லையா?
நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா?
பாடல் பாடியது அவன் ஐ பாடிலிருந்து! பாட்டை ஸ்கிப் பண்ணினான், சாரதி.
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே என்று சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
என்ற எ எம் ராஜா பாடல் பாடியது.
அதையும் ஸ்கிப் பண்ணி, ஷஃபுள் மோடில் போட்டான்,
ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம்
என்ற பி பி எஸ் பாடல் வந்தது. பேசாமல் அதோட விட்டுவிட்டான்.
அந்தப்பாடலைக்கேட்டு அவனுக்கு சிரிப்பாக வந்தது. ஆசை, பாசம், அன்பு, நட்பு, உறவு இல்லாமல் வாழனுமாம்! அப்போத்தான் துன்பமே உங்களை அனுகாதாம்! என்ன ஒரு தத்துவம்! அர்த்தமில்லாத தத்துவம்! இதெல்லாம் இல்லாமல் எப்படி வாழ்வது? அப்படி எதுக்காக வாழனுமாம்?
அவளில்லாத இந்த சிந்தனைகள், இந்த அவளில்லாத அனுபவம் அவனுக்குப் புதுமையாகத்தான் இருந்தது. ஆனால் ரசிக்க முடியாத புதுமையான அனுபவம் இது. இதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!
ஒருவேளை ஒரு ஐந்து வருடம் சென்று இன்றைய மனநிலையை- அவன் நாட்குறிப்பில் எழுதிவைக்கும் எல்லாவற்றையும் - நினைத்துப்பார்த்தால் அவனுக்கு சிரிப்பாக வந்தாலும் வரலாம். இல்லை வராதா? காலம்தான் பதில் சொல்லனும்.
No comments:
Post a Comment