Saturday, August 22, 2009

அடுத்தவீட்டுப்பெண்-விமர்சனம்தமிழ் சினிமாவில் காதல்ப்படங்கள் இன்றைய தேதிக்கு என்ன நிலைமையில் இருக்கு? வசந்த மாளிகை, ஒருதலை ராகம், வாழ்வே மாயம், முதல் மரியாதை என்று வந்து இன்னைக்கு அரை டவுசர் எஸ் ஜே சூரியாவும், சைக்கோ செல்வராகவனும், அல்லது அவங்க அப்பா மரைகழண்ட கஸ்தூரி ராஜாவும் கழிவுபட்ட படங்களை எடுத்துவிட்டு அதை காதல்ப் படங்கள்னு சொல்லிப்பிழைப்பு நடத்துற நிலைமைனு சொல்றீங்களா?!

இருந்தாலும் கல்லூரி, ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து போன்றவை பரவாயில்லைதான்

சரி நம்ம இப்போ ஒரு 40 வருடங்கள் முன்னால போவோம். போய் அழகான வசீகரமான அடுத்த வீட்டுப்பெண்ணைக் கொஞ்சம் கவனிப்போம். சரியா?

ஐயோ ப்ளாக் & வைட் படம்லாம் எனக்குப் பிடிக்காதுங்கனா தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்க சார்/மேடம்! உங்களுக்கு இல்லை இந்தப்பட விமர்சனம்!

இது 60 ஸ்ல வந்த ஒரு அழகான காதல் கலந்த காமடிப் படம். இன்றும் இதை ரசித்துப்பார்க்க முடியும் - என்னைப் போல ஒரு சிலரால் மட்டுமே.

அந்தக்காலத்தில் காதலை வலியுறுத்தி ஒரு படம் இவ்வளவு விரசம் இல்லாமல் எடுக்கவும் முடிஞ்சிருக்கு என்பது நம்ம ரொம்ப பெருமைப்படவேண்டிய விசயம்தான்.

இந்தப்படத்தில் தடுக்கி விழுந்தால் பாடல்கள்! எல்லாம் தேனா இருக்கும்! அஞ்சலிதேவியின் கணவர்தான் இசையமைப்பு, டைரக்ஷன், தயாரிப்பு எல்லாமே!


* 1. கன்னித்தமிழ் மணம் வீசுதடி காவியத்தென்றலுடன் பேசுதடி

* 2. பிரேமையின் ஜோதியினால்

* 3. சங்கம் இது! கற்றார் நிறைந்த சங்கம் இது

* 4. மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக்குயில் போலே இன்ப கானம்
பாடுவேனே

* 5. கையும் ஓடல காலும் ஓடல கண்ணே உன் ஆசையினாலே

* 6. மன்னவா வா வா மாசில்லா வா

* 7. வாடாத புஷ்பமே! வற்றாத செல்வமே! தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!

* 8. கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே! காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே! காதல்
தெய்வீகராணி! போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

* 9. எனக்கு ராஜா நீயே

* 10. கண்களும் கவி பாடுதே! கண்ணே உன் கண்களும் கவி பாடுதே! (இது ஒரு போட்டிப்பாட்டு)

* மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே! (கடைசிப்பாட்டு)


சிரிப்பு நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் தான் ஹீரோ. ஆனால் உண்மையில் இதில் ஹீரோயின் அஞ்சலிதேவியும் (இவர் சொந்தப்படம்) , தங்கவேலும்தான் முக்கிய ஹீரோ பாத்திரங்கள்.

கதை: மன்னார் (டி ஆர் ஆர்) பண்புள்ள இளைஞன். தன் வயதான மாமாவுடன் (60 வயதில் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்) என்று கோபித்துக்கொண்டு அவருடன் சண்டை போட்டுவிட்டு தன் அத்தையிடம் (டி பி முத்துலட்சுமி) வந்து சேர்கிறார். அத்தையும், அவளுக்கு உதவிக்கு ஒரு வேலைக்காரப் பையன் தனியாக வாழும் வீட்டில் மன்னாரும் வசிக்க வருகிறான். மன்னார் ரொம்ப நல்ல இளைஞன். அவனுக்கென்று மாடியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குவருகிறான். ஆள் இல்லாமல் இருந்த பக்கத்துவீட்டில் ஆட்கள் இருக்கும் அரவம் கேட்கிறது. அது ஒரு அழகான இளம்பெண் இருப்பதுபோல இருக்கு. அவனுக்கு க்யூரியாஸிட்டி!

"காலியா இருந்த பக்கத்துவீட்டில் யாரு குடிவந்து இருக்கிறார்கள், அத்தை?" என்று
கேட்கிறான்.

"நல்ல குடும்பம். அந்த குடுப்பத்தில் அப்பா அம்மா ஒரு பொண்ணு.அப்பாவும் அம்மாவும் குணத்தில் தங்ககம்பி, ஆனால் அந்தப்பொண்ணு இருக்கே அது ஒரு குரங்கு!" என்கிறாள் அத்தை.

"ஏன் அத்தை அப்படி சொல்றீங்க?'

"பொண்ணா அது! எந்நேரமும் ஒரே ஆட்டமும் பாட்டும், வயசுப்பொண்ணு ஒழுங்கா அடக்கமா இருக்க வேணாம்? எனக்கு சுத்தமாக பிடிக்கலை" என்கிறாள் அத்தை.

அத்தை மருமகனை சாப்பிட சொல்லிவிட்டு கீழே போவாள்.

இந்த ஒரு சூழ்நிலையில் பக்கத்துவீட்டில் உள்ள "அழகான குரங்கு" லீலா (அஞ்சலிதேவி) ஒரு அமுதகீதம் பாடுகிறாள்.

அதுதான் இரண்டாவது பாடல் பிரேமையின் ஜோதியினால்னு ஆரமிக்கும். ஒரு அழகான அர்த்தமான க்ளாசிக் பாடல் (பி சுஷீலா) இது!

பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும்
இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ


இது ரொம்ப ரொம்ப நல்ல பாடல்! பாடல் வரிகளும் குரலும் இசையும் பிரம்மாதமாக இருக்கும் நம்ம மன்னார் ரொம்பவே ரசிப்பார். மயங்கிவிடுவார் அஞ்சலிதேவியைப்பார்த்து. காதலும் கலப்புத் திருமணமும்தான் ஜாதியை ஒழிக்கமுடியும் என்பதை அழகா சொல்லி இருப்பாள் அந்த அருமையான பாடலில்.

எப்போ? 40 வருசத்துக்கு முன்னாலே! நம்ம திருந்திவிடுவோமா என்ன?

மன்னார் மட்டுமல்ல, அவன் அத்தையும் பாட்டை ரொம்பவே ரசித்துத்தான் கேட்பார்கள்.
ஆனால், பாட்டு முடிஞ்சதும், அத்தை மறுபடியும் மேலே வருவார்.

"பாட்டு ரொம்ப பிரமாதம் இல்லையா, அத்தை?" என்பார் மன்னார்

"பாட்டா இது? ஒரு ராமாயணம், பாரதம் பாடாமல், இப்படி ஒரு வயசுப்பொண்ணு காதல் பாட்டா பாடுவாங்க! பொண்ணா அது! பொண்ணுனா அடக்கம் வேணும்" னு சான்றிதழ் கொடுப்பாள்.

இதை பக்கத்துவீட்டிலிருந்து ஒட்டுக்கேட்ட லீலா (அஞ்சலிதேவி), ஒரு சவுக்கு,
துடைப்பத்துடன் வந்து, ஜன்னல் வழியாக மன்னாரை அழைப்பாள்

"ஏய் மிஸ்டர்!"

"ஏன்"

"அந்த கெழவி என் பாட்டைப்பத்தி கேவலமா பேசும்போது ரொம்ப ரசிச்சீங்களே?'

"பே பே"

"இனிமேல் நீயோ, அந்த கிழவியோ என் பாட்டை பத்தி ஏதாவது சொன்னீங்கனா, இந்த சவுக்கையும் விளக்குமாறையும் வச்சு விளாசு விளாசுனு விளாசிவிடுவேன்! இடியட்! ஸ்டுப்பிட்!" என்று கொடுப்பாள்.

மன்னார் லீலாவின் அழகையும், மிரட்டலையும் பார்த்து அரண்டு போய் தன் நண்பர்களிடம் ஓடுவார்.

யாரு நண்பர்கள்?

தங்கவேலு, கருணாநிதி, மற்றும் இரு காமடி நடிகர்கள்! இவர்கள் ஒரு சங்கம் நடத்துவார்கள்.

"கற்றார் நிறைந்த சங்கம் இது! காரியம் கைகூடும் சங்கம் இது! என்று ஒரு பாடல்.

அவர்களிடம் போய் மன்னார் தன் காதலை கைகூட உதவி செய்யச்சொல்லிக் கேட்ப்பார். அவர்கள் எல்லோரும் மான்னார் வீட்டு மாடிக்கு வருவார்கள்.

அப்போ, மலர்க்கொடி நானே பாடல் காட்சி. நண்பர்கள் அனைவரும் மயங்கிவிடுவார்கள்! நல்ல செலக்ஷன் என்று மன்னாரை பாராட்டுவாங்க!

இதிலே என்ன பிரச்சினை என்றால், மன்னாருக்கு சுட்டுப்போட்டாலும் பாட்டுப்பாட வராது. ஆனால், லீலாவை அடைய ஒரே வழி, நல்ல பாடகனாக இருக்கனும்.

இதற்கிடையில் ஒரு பாட்டு வாத்தியார், "புலவர் பூவரசன்" (நடிகர் பக்கிரிசாமி?) லீலாவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். பாதி பாட்டு பாதி ஜொள்ளு. அவனையும் சமாளிச்சு அவளை வெல்லனும்.

"யார்டா இவன் புதுசா?" என்பான் மன்னார்

"இவந்தான் உன் சகலை! இவனைத் தெரியாதாடா மன்னாரு? பழைய பாட்டுப்புத்தகம் ப்ளாட்ஃபார்ம்ல வித்துக்கிட்டு இருந்தான்டா இவன். இப்போ புலவர் பூவரசன் னு பேரை மாத்திக்கிட்டு பாட்டு வாத்தியார் ஆகிவிட்டான்" என்பான் நண்பன் தங்கவேலு.

அந்த நேரத்தில அழகான பி பி எஸ் பாடல் வரும்,

லீலாவைப்பார்த்து "புலவர் பூவரசர்" வர்ணித்து ஜாடையாக பாடுவான்!

"வாடாத புஷ்பமே!
வற்றாத செல்வமே!
தேடாத தெய்வீக பிம்பமே!
தறி நாடாவைப்போல் ஆடும் இதயத்திலே தினமும் உந்தன் தாபமே!கோபமேன்?
வனிதாமணியே! நீ வாராய் அமுத கனியே!

இதைப் பக்கத்துவீட்டிலுருந்து மன்னார் கோஷ்டி பார்த்து வயிறு எரியும்! இப்போ லீலாவை இம்ப்ரெஸ் பண்ண ஒரே வழி, நல்லா பாடுவது! மன்னாருக்கு பாட்டுப்பாட ட்ரயினிங் கொடுப்பாங்க, நண்பர்கள். ஆனா மன்னாருக்கு பாட்டு வராது!

மன்னாரை வாயசைக்க வைத்து தங்கவேலு பின்னால் இருந்து பாடுவார்.

என்ன பாடல்?

கண்ணாலே பேசிப் பேசிக்கொல்லாதே!
காதாலே கேட்டுக்கேட்டு செல்லாதே!
காதல்தெய்வீகராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனசைவிட்டுத் துள்ளாதே!

இந்த முதல் பாடல்லயே, மன்னார் மேலே மதிப்பும், மரியாதையும் காதலும் வந்துவிடும் லீலாவுக்கு. படம் இப்படியே ரொம்ப ஜாலியாப் போகும், கடைசிவரை.

கடைசியில் ரொம்ப நல்ல முடிவு!

இதுவரை அடுத்தவீட்டுப்பெண் லீலாவை பார்க்கவில்லைனா கட்டாயம் பாருங்க! ரசிக்கத்தக்க இருப்பாள்!

10 comments:

யாத்ரீகன் said...

Online-la link irukuma boss ?!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல நினைவுகள்!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

யூத் படம்..,

கிருஷ்ணமூர்த்தி said...

இதுக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம வால்பையன் திடீர்னு சினிமா விமரிசனம் எழுத ஆரம்பிச்சதுக்கும் சம்பந்தம் இல்லையே:-))

தியாகராஜா பாகவதர் நடித்த சிந்தாமணி, பி யு சின்னப்ப நடித்த பவளக்கொடி படத்தில் இருந்தே ரீ வைந்ட் செய்ய ஆரம்பிச்சிருந்தா இன்னும் கலை கட்டியிருக்கும் போல!!

பிரசன்னா இராசன் said...

எல்லாம் சொன்னீங்க ரைட்டு. ஒரு முக்கியமான ஆளைப் பத்தி சொல்லாம் விட்டுடீங்களே. அது தான் படத்தோட இசையமைப்பாளர் பி.ஆதி நாராயண ராவ். போன வருஷம் வரைக்கும் ‘கண்ணாலே பேசி பேசி’ பாட்டு எங்க கல்லூரியில் ஹாட் பேவரைட். தலைமுறை தாண்டிய பாடல்...

வருண் said...

***யாத்ரீகன் said...
Online-la link irukuma boss ?!

22 August, 2009 10:28 PM**

எனக்குத்தெரிய இல்லைங்க, யாத்ரீகன்! சாரி :(

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்ல நினைவுகள்!!

23 August, 2009 1:08 AM***

ஒரு பழைய வி எஸ் இருக்குங்க என்னிடம். பாட்டு மட்டும் கட் ஆகல. ஆனால் முழுப்படம் இருக்கானு தெரியலை :)

வருண் said...

**SUREஷ் (பழனியிலிருந்து) said...
யூத் படம்..,

23 August, 2009 1:10 AM***

50 வருடம் முன்னால வந்த படம். ஆனால் இன்னைக்கும் ரசிக்க முடியுது. இட் இஸ் எ க்ளாசிக்!

வருண் said...

***கிருஷ்ணமூர்த்தி said...
இதுக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம வால்பையன் திடீர்னு சினிமா விமரிசனம் எழுத ஆரம்பிச்சதுக்கும் சம்பந்தம் இல்லையே:-))

தியாகராஜா பாகவதர் நடித்த சிந்தாமணி, பி யு சின்னப்ப நடித்த பவளக்கொடி படத்தில் இருந்தே ரீ வைந்ட் செய்ய ஆரம்பிச்சிருந்தா இன்னும் கலை கட்டியிருக்கும் போல!!

23 August, 2009 1:34 AM***

வால்ப்பையன் பழைய படங்கள் விமர்சனம் எழுதியது எனக்குத் தெரியாதுங்க. :)

வண்ணக்கிளினு ஒரு படம் பார்த்து இருக்கேன்.

எம் கே டி, பி யு சின்னப்பா படம்லாம் பார்த்ததில்லைங்க :)

ஆனா மனோஹர், மைனாவதி நடிச்ச "வண்ணக்கிளி" பார்த்து இருக்கேன். அதுவும் நல்ல படம்.

* சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு

* அடிக்கிற கைதான் அணைக்கும்

போன்ற நல்ல பாடல்களும் உண்டு. பார்க்கலாம் :-)

வருண் said...

****பிரசன்னா இராசன் said...
எல்லாம் சொன்னீங்க ரைட்டு. ஒரு முக்கியமான ஆளைப் பத்தி சொல்லாம் விட்டுடீங்களே. அது தான் படத்தோட இசையமைப்பாளர் பி.ஆதி நாராயண ராவ். போன வருஷம் வரைக்கும் ‘கண்ணாலே பேசி பேசி’ பாட்டு எங்க கல்லூரியில் ஹாட் பேவரைட். தலைமுறை தாண்டிய பாடல்...

23 August, 2009 4:17 AM****

உண்மைதாங்க, இராசன், ஆதி நாராயன ராவ்தான் இந்தப்படத்தில் மிகப்பெரிய ஹீரோ!

இசையும் சரி, டைரக்ஷனும் சரி (ரெண்டுமே அவர்தான்), பிரமாதமா இருக்கும் :)