"இதோ ஒரு நிமிஷம் அம்மா!" என்று தன் அறையில் ஜி மெயிலை மட்டும் செக் பண்ணிவிட்டு, எல்லா விண்டோஸையும் க்ளோஸ் பண்ணிவிட்டு எழும்போது அவள் மாணிட்டரில் இருந்த ஃபேவரைட் நடிகரின் போஸ் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஸ்டைலாக வந்து நின்றது. லதா, எழுந்து புடவை மாற்றி, மேக்-அப் பண்ணுவதற்காக ஓடினாள்.
லதாவுக்கு காதல் கல்யாணத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதுவும் இந்த கம்ப்யூட்டர் ஆண்-லைன் காதல் தலைவிரித்தாடும் இந்தக்காலத்தில்! நேற்றைய காதல் ஜோடிகளெல்லாம் இன்று பிரிந்து தியானமும் மெடிட்டேஷனும் செய்துகொண்டிருக்கிற இந்த நவீன உலகத்தில், காதல் எல்லாம் சும்மா கொஞ்ச நாள் உடல்ப்பசிக்குத்தான் என்று நம்பினாள், லதா. ஆனால் கணவன் மனைவி உறவு பலப்பட ஓரளவு ஒரே டேஸ்ட் இருக்கனும். ஒருவர் ரசிப்பதை இன்னொருவர் நிச்சயம் வெறுக்கமட்டும் கூடாது என்று முழுமையாக நம்பினாள் அவள்.
லதாவை பெண்பார்க்கவந்த மாப்பிள்ளை குடும்பம் உயர்தரமானதாகவும், மாப்பிள்ளை மோகன் நல்ல உயரமாக, மாநிறமாக, ஆள் ரொம்ப அழகா இருந்தார், மேலும் நல்ல வேலையும் பார்த்துக்கொண்டிருந்தார். புன்னகையுடன் நல்ல மேன்னர்ஸுடன் நாகரீகமாகப் பேசினார். அப்பா, அம்மா, அண்ணாவுக்கும், அவள் தங்கை ஹேமாவுக்கும், ஏன் அவளுக்கும் அவரை ரொம்பவே பிடித்துவிட்டது. அன்று இரவு அப்பாவிடம் ஒருமாதிரி மாப்பிள்ளையைத் தனக்குப் பிடித்ததாக சொல்லிவிட்டாள், லதா.
அதன்பிறகு ஒரு நாள் குடும்பத்துடன் போய் அவர் வீட்டில் ஸ்னாக்ஸ், காஃபி சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். இன்னொரு நாள் அவள் அம்மா அப்பாவின் ஏற்பாட்டின்படி, அவளும், மோகனும், அவள் அப்பா சீனிவாசன், மற்றும் அம்மாவுடன் சேர்ந்து கோயிலுக்கு போனார்கள். கோயிலில் இவர்களை தனியாக பேசிக்கொள்ள வசதி செய்துகொடுத்தார்கள், அவளுடைய அன்பான அப்பா, அம்மா. லதா ஒரு பச்சைகலரில் பட்டுச்சேலை கட்டிப்போயிருந்தாள். மாப்பிள்ளை மோகனுக்கு அந்த சேலையில் அவள் இருக்கும் அழகு ரொம்பவே பிடித்ததாக சொன்னார். அவர் அணிந்துவந்த பேண்ட்ஸ், டி-ஷிர்ட்டும் கலர் செலக்ஷன் அவளுக்கும் பிடித்தது. போகப்போக அவரை ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது அவளுக்கு. இருந்தாலும் ஏதோ ஒண்ணு அவரிடம் கேக்கனும்னு அவள் மனதில் உறுத்தல் இருந்தது. அது ரொம்ப சில்லியான விஷயம் என்பதால அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
ஒரு மாதிரி நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 3 மாதத்தில் திருமணம் என்று கல்யாணத்தேதியும் முடிவானது. நிச்சயம் செய்யப்பட்டு முடிந்து சில நாட்களில் அவளுக்கு கல்யாணத்திற்கு வாங்கிய நகை, பட்டுப்புடவை காட்டுவதற்காக லதாவையும் தன்னுடன் அழைத்து சென்றார் தந்தை சீனிவாசன். கொஞ்ச நேரம் பேசியபிறகு அவளை மோகன் தன்னுடைய அறைக்கு தனியாக அழைத்துச் சென்றார். லதா, மோகனின் அறையில் ஒரு 5 நிமிடம் இருந்துவிட்டு அங்கே இருந்து அவருடன் வெளியே வந்தாள்.
வந்தவள் முகம் வேற மாதிரி ஒரு கலவரத்துடன் இருந்ததை கவனித்தார், தந்தை. மகளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அவர், "சரி, ஒண்ணும் இருக்காது, நாளைக்கு சரியாகிவிடும்" என்று ரொம்ப கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் அடுத்த நாளும் லதா முகத்தில் அதே போல் ஒரு கலவர உணர்ச்சி இருந்ததை கவனித்தார். கடைசியாக, அவள் அறைக்கு சென்று உட்கார்ந்து மெதுவாக லதாவிடம் கேட்டேவிட்டார்,
“என்னம்மா லதா, ஒரு மாதிரியா இருக்க?”
“இல்லப்பா ஒண்ணுமில்லை”
“சும்மா சொல்லும்மா” என்றார்.
“இனிமேல் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதாப்பா?” என்றாள் பரிதாபத்துடன்.
“என்னம்மா நடந்தது?”
“ஒண்ணுமில்லைப்பா அவரோட குடும்ப வாழ்க்கை ஒத்துப்போகாதுனு தோனுதுப்பா எனக்கு”
“என்னம்மா நடந்தது, அவர் ரூமிலே? எதுவும் தப்பா நடந்துகொண்டாரா உன்னிடம்?”
“இல்லைப்பா. அவர் எதுவும் தப்பா எல்லாம் நடக்கவில்லை. எனக்குத்தான் அவர் டேஸ்ட் பிடிக்கலை அப்பா”
“விபரமா சொல்லும்மா. எதுனாலும் பரவாயில்லை” என்றார் அன்புடன்.
லதா, அழ ஆரம்பித்துவிட்டாள்.
“சும்மா சொல்லும்மா. கல்யாணத்தை நிறுத்திடுவோம். என்ன காரணமா இருந்தாலும் பரவாயில்லை” என்றார் அப்பா கனிவுடன்.
“அவர்.. அவரு, ஒரு.. என்று ஒருவழியாக விசயத்தைச் சொல்லி முடித்தாள் லதா. தன் மகள் மனதை நன்கு அறிந்தவர் சீனிவாசன். அவளுக்கு பிடிக்கிற சின்ன சின்ன விசயங்களையும், அவள் வெறுக்கிற சில்லியான விசயங்களையும் கவனித்து அவள் எண்ணங்களை மதிப்பவர் அவர். அவருக்கு தெளிவாக மகளின் அச்சம் புரிந்தது. "அதனால் என்னம்மா? இதெல்லாம் பெரியவிசயம் இல்லை" என்று சொல்லி அவளை ஃபோர்ஸ் பண்ண விரும்பவில்லை அவர். அத்துடன் கல்யாணத்தை ஒரு வழியாக நல்லமுறையில் நிறுத்திவிட்டார்கள். நேரிடையாக மாப்பிள்ளையிடமே தன் மகள் பலஹீனத்தை சொல்லிக் கேட்டதும், மோகனும் சரி என்று சொல்ல, கல்யாணம் சுமூகமாக நிறுத்தப்பட்டது.
லதா, அவள் தந்தையிடம் சொன்னது இதுதான், "ஏன்னா ஏன்னா அவர் ஒரு கமல் ரசிகர்ப்பா"
-முற்றும்
இது ஒரு மீள் பதிவு!
குறிப்பு: கதை முன்பு பிரசுரித்தபோது, பின்னூட்டத்தில் பதிவர் மணிகண்டன் கொடுத்த ஆலோசனைப்படி இதில் முடிவை "ட்ரிம்" செய்து இருக்கேன்! அவருக்கு என் நன்றிகள்! :-)
படம்: ரஜினி ரசிகைகள் (கூகில் மற்றும் பிஹைண்வுட்ஸ்) |
3 comments:
கமல் ரசிகர் என்பதற்காக கல்யாணத்தை நிறுத்தியாச்சா .? பாவம் .
அவரு வருண் ரசிகர் பா என்று முடித்திருந்தால் .இன்னும் சிறப்பான நகைச்சுவையாக இருந்திருக்கும் .....
வாங்க அஞ்சா சிங்கம்! அவரு ஆட்டுக்குட்டி ரசிகர்னு முடிச்சாக்கூட இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாத்தான் முடிஞ்சு இருக்கும். :)))))
என்ன பண்ணுறது, லதாவுக்கு ரஜினி மட்டும்தான் பிடிக்கும் போலும். :-)
Post a Comment