Friday, January 29, 2010

உறவுகள் முறியும்!

இ-மெயில் அக்கவுண்ட்ல லாகின் பண்ணினான் சம்பத். அதிசயமாக அன்று லலிதாவிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. சுமார் 1 1/2 வருடத்திற்குப் பிறகு! இப்போது அவளுக்கு திருமணமாகி 2 1/2 வருட காலமாகிவிட்டது.

இனிமேலும், ஏன் அவளை கல்யாணம் செய்துக்க முடியவில்லை? ஏன் கல்யாணம் செய்யமுடியாது என்று தெரிந்துகொண்டே அவளை காதலித்தோம்? என்று நினைத்து நினைத்து வருந்தி வருந்தி, தன்னைத்தானே நொந்துகொள்ள இஷ்டமில்லை அவனுக்கு. "கதம் கதம்" என்று அதைப்பற்றி யோசிக்காமல் விட்டு விட முடிவு செய்துவிட்டான், சம்பத். இப்பொழுதெல்லாம் லலிதாவை ஒரு வழியாக மறக்க, அவள் எண்ணங்களால் தன் மனநிலை பாதிக்கப்படாமல் வாழக்கற்றுக்கொண்டான், சம்பத்.

அவளிடம் இருந்து வந்த மெயிலை நிதானமாக வாசித்தான். அது வழக்கம் போலதான் இருந்தது

Hi Sampath!

How are you doing? I hope you are doing good! It has been long time. I am doing fine. I am busy with my family and, of course happy. I think about you sometime and miss you sometime!

Bye for now!

-Lalitha

திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கலாம் என்று இருவரும் பேசியிருந்தார்கள். ஆனால் அது முடியவே முடியாத காரியம் என்று தெரியாது இருவருக்கும். அது மட்டுமல்ல, முன் அனுபவம் இல்லாததால் நெறைய விசயங்கள் இருவருக்குமே தெரியாமல் இருந்தது. இப்போதுதான் அனுபவித்த பிறகு தங்கள தவறு, முட்டாள்தனம் எல்லாம் புரிந்தது. அறியாமையால், அனுபவமில்லாமல் செய்த "ப்ராமிஸ்" எல்லாம் எப்படி காப்பாத்த முடியும்? அதை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்தான் இப்போது.

நட்புனா என்ன? சும்மா இ-மெயில்ல "ஹாய்" சொல்லிக்கொள்வதா? சும்மா பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லிக்கொள்வதா? இல்லைனா சும்மா நியு இயர் க்ரீட்டிங்ஸ் சொல்லிக்கொள்வதா? அதெல்லாம் சும்மா ஃபார்மாலிட்டிக்கு ரெண்டுபேர் சொல்லிக்கொள்வது. நட்பு என்பது சம்பத்தைப்பொறுத்த வரையில் வேறு. ரெண்டு பேருக்கும் இடையில் எந்தவிதமான "பேரியர்ஸ்"ம் இருக்கக்கூடாது! எதையுமே இதை சொல்லுவோமா வேணாமானு யோசிக்கக்கூடாது! சண்டை போட்டுக்கொண்டாலும் அதில் அந்த "உரிமை" இருக்கனும். அதுதான் அவனைப்பொறுத்தவரையில் நட்பு! அதுதான் நண்பர்களிடம் அவன் எதிர்பார்ப்பது! அந்த நட்புடன் முன்னால் காதலியான லலிதாவுடன் இருக்கமுடியுமா என்ன ? அதுவும் அவள் இன்னொருவரை மணந்தபிறகு?அவள் இன்னொருவருக்கு தன்னை முழுமையாகத் தந்த பிறகு? இன்னொருவரிடம் தன் இன்ப துன்பங்களை சமமாக பகிர்ந்து கொண்ட பிறகு? அதெப்படி முடியும்? நிச்சயம் முடியாது! என்று தெரிந்து இருந்தும், ஏன் முடியாது? என்று நினைத்தான் அன்று! தன் முட்டாளதனத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சம்பத், இன்று.

பொதுவாக திருமணம் ஆனபிறகு அவளிடம் இருந்து வரும் மெயில்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன. அதாவது, ஏதோ பேருக்கு ஒரு மெயில்! எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல். ஏதோ கடமைக்கு இவனுக்கு ஒரு மெயில் அனுப்பனுமே என்று அனுப்புவது போல! அதுவும் ஏதோ பயங்கர கில்ட்டி காண்ஸியண்ஸுடன் அவள் எழுதுவதுபோல அவனுக்குத் தோனும்! அது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதுக்காக அவளை இப்படி கஷ்டப்பட்டு மெயில் அனுப்ப வைக்கனும்? எதுக்காக அவளை நட்பு என்கிற பெயரில் அவன் தொடர்ந்து கஷ்டப்படுத்தனும்? என்று வருந்துவான், சம்பத்.

அவன் யோசிப்பதுண்டு! பேசாமல் பதில் எழுதாமல் நிறுத்திவிடுவோமா? அதுதான் இரண்டு பேருக்குமே நல்லது. இப்படியெல்லாம் பலமுறை யோசித்துவிட்டு அவள் மெயிலுக்கு நாகரீகமாக பதில் எழுத முயன்று நெறையவே எழுதி அனுப்புவான். ஆனால் அவளிடம் இருந்து அதன்பிறகு பதிலே வராது. பதில் வந்தாலும் அதில் இவன் எழுதியதை அவள் படித்ததாகவே தோனாது. இவன் எழுதி அந்த மெயில் எல்லாம் எழுதி குப்பைத் தொட்டியில் போடுவது போல இவன் எழுதிய எழுத்துக்கள் போகும். எதுக்கு இதெல்லாம்? தேவையே இல்லாத ஒருவரை ஒருவர் கஷடப்படுத்திக் கொள்வது தேவையா ? வேஸ்ட் ஆஃப் டைம்! தேவையில்லாத மனக்குழப்பம். அவளை நிம்மதியா வாழவிட்டால்தான் என்ன? அதுதானே உண்மையான ஜெண்டில்மேனுக்கு அழகு? மரியாதையாக பதிலே எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று எத்தனையோ தடவை நினைத்து இருக்கான். ஆனால் அவனால் முடியாது! அப்படி இருப்பது அவளை கஷ்டப்படுத்தும் என முட்டாள்த்தனமாக நம்பினான். அவனுடைய திருப்திக்காக அவளை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைத்து பதில் எழுதுவான். இவன் எழுதுவதை அவள் படிப்பதே இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விளங்கியது. அவனுக்கு எல்லாமே மெதுவாகத்தான் புரியும். அவள் என்றுமே எல்லாவற்றிலுமே அவனைவிட ஸ்மார்ட் தான்.

சம்பத்துக்கு பெரிய ஈகோ உண்டு. ஆனால் அதை அவளிடம் க்ளோசாக இருக்கும்போது அவன் காட்டியதில்லை. அவளிடம் பேசிக்கொண்டு இருந்தால் ஈகோ எல்லாம் பறந்து போயிடும். இப்போ அவள் பேசுவதில்லை என்பதால் அவன் மெயில்களை இக்னோர் பண்ணுவதைப்பார்த்துப் பார்த்து அவன் ஈகோ தலை விரித்தாடியது. சம்பத் இன்று கொஞ்சம் சீரியஸாகவே யோசித்தான். தர்க்க ரீதியாக. திறந்த மனதுடன்! எதுக்காக இவளிடம் இப்படி ஒரு காண்டாக்ட்? எதுக்காக இவள் சொல்லும் "ஹாய்"க்காக சும்மா நான் வரிந்து வரிந்து கடிதம் எழுதனும்? என்று சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான். சப்போஸ் லலிதாவிடம் காண்டாக்ட் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். அப்படி இருப்பது அவனுக்கு நிச்சயமாக பெட்டராக தோன்றியது. அவளிடம் இருந்து வரும் மெயில்கள் எந்தவிதமான பிடிப்பும், அன்பும் எதுவுமே இல்லாமல்தானே வரும் . அது அவள் தப்பு இல்லைதான்! அவன் தப்புனே இருக்கட்டுமே! யார் தப்பு என்பதை விட்டுவிட்டு இப்போ அந்த மாதிரியான ஒரு தொடர்பு எதுக்கு? என்று யோசித்தான். அவசியமே இல்லை! ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் அவளிடம் இருந்து வரும் இ-மெயில்ல இருந்து அவன் புரிந்து கொள்வது. அவள் உயிரோடு நல்லா இருக்கிறாள் என்பது மட்டும்தான்!

சரி, இன்றைய அவர்கள் நிலையில், சம்பத் உயிரோடு இருந்தால்தான் என்ன? இல்லை செத்தால்தான் அவளுக்கென்ன? எந்த வகையில் லலிதாவை இவன் இருப்பும், இறப்பும் பாதிக்கும் ? சப்போஸ் அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பிக்கு ஏதாவது ஒன்றென்றால் அவளை நிச்சயம் அது பாதிக்கும். அவளுக்கு அல்லது அவள் கணவன், கணவன் வீட்டிலுள்ளவர்கள், அவள் தோழிகள், வேலையில் உள்ள கலீக்ஸ் போன்றவர்களுக்கு உடல்நலம் குன்றினால் அவளை பாதிக்கும். ஆனால் சம்பத் செத்தால்கூட எந்தவகையிலும் அவளை பாதிக்காது என்பது அவனுக்கு தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

என்றும் போலில்லாமல் ஒர் தெளிவான மனதுடன் லலிதாவிடம் இருந்து வந்த அந்த மெயிலை டெலீட் செய்துவிட்டு. இ-மெயிலை க்ளோஸ் பண்ணினான். லலிதாவிடம் இருந்து வந்த மெயிலை சம்பத் இப்படி டெலீட் செய்வது இதுதான் முதல் முறை. சம்பத் முட்டாள் போல வாழ்க்கையில் கடந்த காலத்தையே திரும்பிப்பார்க்காமல், முன்னால் வருங்காலத்தைப் பார்க்க ஆரம்பித்தான். தன் இன்ப துன்பங்களை யோசிக்க ஆரம்பித்து, தன் மனநிலை முக்கியம் என்று சுயநலமாக மாற ஆரம்பித்தான். தனக்கும் சுயமரியாதை இருக்கு என்று தன்னுடைய பெரிய ஈகோவை சொல்லிக்கொண்டான்.

அடுத்தநாள் மீட்டிங்க்கு அவன் செய்ய வேண்டிய ப்ரெசெண்டேசன்ல வேலை செய்ய ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும், அவன் பதில் எழுதவில்லை என்றால் லலிதா இனிமேல் அவனை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று. அவளை நிம்மதியாக வாழ வழிசெய்த திருப்தியில் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான். சில உறவுகள் தொடரும். சில உறவுகள் முறியவும் செய்யும்!

6 comments:

Sangkavi said...

//சில உறவுகள் தொடரும். சில உறவுகள் முறியவும் செய்யும்! //


இந்தக் கதையை படித்த உடன்....

மனது ஏனோ அலைபாய்கிறது....

வருண் said...

***Sangkavi said...

//சில உறவுகள் தொடரும். சில உறவுகள் முறியவும் செய்யும்! //


இந்தக் கதையை படித்த உடன்....

மனது ஏனோ அலைபாய்கிறது....

29 January 2010 8:57 AM***

அப்படியா? :)

வெறும் கடலை கார்னர் மட்டும் எழுதாமல் கொஞ்சம் சீரியஸாவும் எழுதிப்பார்ப்போமேனு ஒரு முயற்சி :)

வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி, சங்கவி :)

கிச்சான் said...

வருண் கதை நன்றாக இருக்கிறது .ஒரு மெயில் வைத்து கதை எழுதிருப்பது புதிய முயற்சியாக இருக்கிறது

வாழ்த்துக்கள்

வருண் said...

***கிச்சான் said...
வருண் கதை நன்றாக இருக்கிறது .ஒரு மெயில் வைத்து கதை எழுதிருப்பது புதிய முயற்சியாக இருக்கிறது

வாழ்த்துக்கள்***

நன்றி, கிச்சான் :)

Prabha said...

it seems your personal experience. Time is the best healer.

வருண் said...

Thanks for sharing your thoughts,
--- Prabha! :)